அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரத்தில், கட்சி அறிவித்தபடி பொதுக்குழுக்கூட்டம் நடத்தக்கூடாது என ஓ.பி.எஸ் தரப்பு வழக்கு தொடுத்ததையடுத்து, நேற்றிரவே இந்த வழக்கு உடனடியாக நீதிபதி துரைசாமி இல்லத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணையில், பொதுக்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றுவதாக ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களைத் தவிர வேறு தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றக்கூடாது எனக் கூறி பொதுக்குழுக்கூட்டத்தை நடத்தலாம் என நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, சென்னை வானகரம் பகுதியிலிருக்கும் ஸ்ரீவாரு மண்டபத்தில் பொதுகுழுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலின், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இல்லத்திருமண விழாவில், அ.தி.மு.க-வின் பொதுக்குழுக்கூட்டத்தை மறைமுகமாக விமர்சித்திருக்கிறார்.
சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற கே.கே.எஸ்.எஸ்.ஆர் இல்லத்திருமண விழாவில் பேசிய ஸ்டாலின், “இந்த ஆடம்பரமான இவ்வளவு பெரிய மண்டபத்தில் நம்முடைய வீட்டுத் திருமணம் நடப்பதுபோல… இன்னொரு பக்கத்து திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். எனவே அந்த பிரச்னைகளுக்கெல்லாம் நான் போக விரும்பவில்லை.
அதில் நாம் தலையிடவேண்டிய அவசியமே இல்லை. ஆனால், அவர்கள்தான் நம்மை அழிக்க முடிவு செய்திருக்கிறார்கள். தி.மு.க-வை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயிருக்கிறார்களே தவிர, தி.மு.க அழிந்ததாக வரலாறே கிடையாது. அந்த உணர்வோடு நாம் இருக்கிறோம்” என அ.தி.மு.க பொதுக்குழுக்கூட்டத்தை மறைமுகமாக விமர்சித்துப் பேசினார்.