மத்தியப் பிரதேசத்தில் புல்டோசரில் சவாரி செய்து திருமண நிகழ்ச்சியில் சிவில் இன்ஜினியர் மாப்பிள்ளை பங்கேற்ற ருசிகர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் பெதுல் நகராட்சியை சேர்ந்த இளைஞர் அங்குஷ் ஜெய்ஸ்வால். இவர் சிவில் இன்ஜினியராக டாடா கன்சல்டன்சியில் பணிபுரிந்து வருகிறார். பொதுவாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மணமகன் குதிரை அல்லது விலை உயர்ந்த காரில் ஊர்வலம் வருவது வழக்கம். ஆனால் அங்குஷ் வேறு மாதிரியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று கனவு கண்டுள்ளார். அது புல்டோசரில் ஊர்வலம் வர வேண்டும் என்பதாகும்.
தனது திருமணத்தில் புல்டோசரில் சவாரி செய்ய விரும்புவதாக அவரது குடும்பத்தினரிடம் அங்குஷ் கூறியபோது, அவர்கள் மகிழ்ச்சியுடன் சம்மதித்துள்ளனர். இதையடுத்து தனது விருப்பத்தை நிறைவேற்றினார் அங்குஷ். தனது நண்பர்களுடன் புல்டோசரில் பிளேடுகளில் அமர்ந்து திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
திருமணத்திற்கு இப்படி ஒரு வித்தியாசமான முறையில் மாப்பிள்ளை வந்ததைக் கண்டு பார்வையாளர்கள் ஆச்சரியமடைந்தனர். சம்பவத்தை தங்கள் மொபைல் ஃபோனில் படம் பிடித்தனர். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM