ஒற்றைக் காலில் நிற்கும் உடற்பயிற்சி அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் ஒற்றை காலில் நிற்பது என்பது, உங்கள் ஆரோக்கியம், நீங்கள் வாழப்போகும் நாள்களை தொடர்புபடுத்த வாய்ப்புள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?
நடுத்தர மற்றும் வயதானவர்கள் ஒற்றை காலில் 10 விநாடிகளாவது நிற்க முடியாவிட்டால், அடுத்த 10 வருடங்களுக்குள் அத்தகையவர்களுக்கு மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது என, பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் என்ற இதழில் வெளியான ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
ஒருவரால், தன் உடலை சமநிலையில் நிறுத்த முடிவதற்கும், அவர் ஆரோக்கியத்துகும் இடையே உள்ள தொடர்பை ஆய்வு செய்ய தொடங்கிய ஆராய்ச்சியாளர்கள், 51 முதல் 75 வயதுடைய 1,702 நபர்களை சோதனையில் ஈடுபடுத்தினர்.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஃபின்லாந்து மற்றும் பிரேஸிலை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால், 2008 முதல் 2020 வரை, 12 வருட காலம் நடத்தப்பட்ட ஆய்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் அனைவரும், தங்களது ஒற்றைக் காலில் நின்று, மற்றொரு காலை நிற்கும் காலுக்கு பின்னால் நீட்டி, கைகளை சேர்த்தபடி, கண்களை நேராக நோக்கி 10 விநாடிகள் வரை நிற்க வேண்டும். இரண்டு கால்களிலும் மூன்று முயற்சிகள் வரை செய்ய வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
ஆனால், இச்சோதனையில் 5ல் ஒருவரால் நிற்க முடியாமல் போனது. ’ஒற்றைக் காலில் நிற்க முடிந்தவர்களை ஒப்பிடுகையில், நிற்க முடியாதவர்கள் அடுத்த 10 வருடங்களில் இறப்பினை விரைவில் எதிர்கொள்வதற்கான ஆபத்து 84 சதவிகிதம் அதிகம் உள்ளது. அதேபோல் இறப்புக்கான காரணமானது வயது, பாலினம், பி. எம். ஐ, உடல்நலக் குறைபாடுகள், கரோனரி தமனி நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், அதிக கொழுப்பு மற்றும் நீரிழிவு போன்ற காரணங்களை பொறுத்தது என்றும் கருதப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
’முதியவர்கள் ஒற்றைக் காலில் நிற்பது பல காரணங்களுக்காக முக்கியமாகக் கருதப்படுகிறது. காரில் இருந்து இறங்க, படிக்கட்டில் இருந்து ஏறி இறங்க என தொடர்ந்து நாம் ஒற்றைக் காலில் நிற்பதற்கான நிலை தேவைப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இது ஃபிட்னஸையும், ஆரோக்கியத்தையும் எதிரொலிப்பதாக உள்ளது’ என இந்த ஆய்வின் ஆசிரியரான டாக்டர் கிளாடியோ கில் அரோஜோ கூறியுள்ளார்.
ஒற்றைக் காலில் நிற்பதை வயதானவர்களுக்கான ஆரோக்கிய பரிசோதனைகளில் ஒன்றாக இணைக்க வேண்டும் என்றும், 10 நொடிகள் ஒற்றை காலில் நிற்க இயலாமல் சமநிலை தவறுபவர்கள், உணவு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை என தங்கள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறார்கள், ஆய்வை மேற்கொண்ட மருத்துவர்கள்.