குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரில் சந்திப்பு; திரௌபதி முர்மு தேர்வை இந்தியாவின் அனைத்து பிரிவினரும் வரவேற்று உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக ஒடிசா மாநிலத்தின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக மூத்த அரசியல் தலைவர் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். இருவரும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் ஆதரவு கோரி வரும் நிலையில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மு நாளை தனது வேட்புமனுவை கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று தாக்கல் செய்ய இருக்கிறார்.
இதையடுத்து இன்று காலை ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்தார் திரௌபதி முர்மு. விமான நிலையத்தில் திரௌபதி ஒருமுறை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் வரவேற்றனர். இதை அடுத்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற திரௌபதி முர்மு. சுமார் 10 நிமிடங்கள் முதல் 15 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பும் நடைபெற்று நிறைவடைந்த நிலையில் சந்திப்பு தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு அவர்களை சந்தித்தேன். அவரது தேர்வை, இந்தியாவின் அனைத்து பிரிவினரும் வரவேற்றுள்ளனர். அடிமட்ட பிரச்சினைகளை பற்றிய அவரது புரிதல் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கான பார்வை சிறப்புக்குரியது என பதிவிட்டுள்ளார். தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தன்னை குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணி அளவில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்க உள்ளார் திரௌபதி முர்மு. ஏற்கனவே திரௌபதி முர்முவுக்கு பீகார் மாநில நிதிஷ்குமார், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து இருக்கக்கூடிய நிலையில் நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்கா வருகிற 27-ஆம் தேதி தனது வேட்புமனுவை கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று தாக்கல் செய்ய உள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM