அதிமுக பொதுக்குழு கூட்டம், ஜூலை 11ஆம் தேதி மீண்டும் கூடும் என்று அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்துள்ளார்.
அதிமுக பொதுக் குழுக் கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று காலை 11.30 மணிக்குத் தொடங்கியது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வந்த நிலையில், பொதுக்குழு கூடியது. அப்போது, மேடைக்கு வந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாகக் கூறினார்.
பிறகு பேசிய கே.பி. முனுசாமி, அனைத்துத் தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்துவிட்டதால், ஒற்றைத் தலைமை வரவேண்டும். ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற தீர்மானத்தோடு சேர்த்து எப்போது மீண்டும் பொதுக்குழு கூட்டப்படுகிறதோ, அப்போதுதான் ஏனைய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து தமிழ்மகன் உசேன் புதிய அவைத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
அப்போது 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை சி.வி.சண்முகம், அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனிடம் அளித்தார். அப்போது பேசிய சண்முகம், இரட்டை தலைமையால் உள்ள நிர்வாக சிக்கல், ஒருங்கிணைப்பு இல்லாததால், திமுகவை எதிர்த்து செயல்பட முடியவில்லை. இது நிர்வாகிகள், பொது மக்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது.
எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக 100 ஆண்டுகள் ஆனாலும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற ஜெயலலிதாவின் எண்ணம் நிறைவேற, தைரியமான, தெளிவான ஒற்றை தலைமை ஏற்படுத்தப்பட வேண்டும். எனவே பொதுக்குழுவில் இரட்டை தலைமை ரத்து செய்துவிட்டு ஒற்றை தலைமையின் கீழ் தொண்டாற்றுவது சம்பந்தமாக விவாதித்து பதிவு செய்ய வேண்டும். அடுத்த பொதுக்குழுவிற்கான தேதியை இன்றே முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து தமிழ் மகன் உசேன் கூறும்போது, எம்.ஜி.ஆரை திமுகவில் இருந்து நீக்கியதைக் கண்டித்து அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தில் இணைந்தேன். எம்.ஜி.ஆர். தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று நான் அழைத்தேன். அவர் தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று ரத்தக் கையெழுத்து போட்டவன் நான். அனைவரும் என் சகோதரர்கள், அனைவரும் என் தொண்டர்கள் என்றார்.
தொடர்ந்து, அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி காலை 9: 15 மணிக்கு நடக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.
அப்போது, மேடைக்கு வந்த துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், சட்டத்திற்கு புறம்பான இந்த தீர்மானத்தை எதிர்த்து, நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம். மேலும் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து போட்டால்தான் அடுத்த பொதுக்குழு கூட்டம் செல்லும், எனவே சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக ஆவேசமாக மேடையில் இருந்து வெளியேறினார்.
அதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மேடையில் இருந்து வெளியேறினர்.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஜூலை 11ல் நடைபெற உள்ள பொதுக்குழுவில் இபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறினார்.
இப்படி பரபரப்பான சூழலில் கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டம், எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் நிறைவடைந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“