நேபாளத்தில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து 161 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 4.3 என்ற அளவில் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Earthquake of Magnitude:4.3, Occurred on 23-06-2022, 03:41:51 IST, Lat: 28.28 & Long: 83.81, Depth: 66 Km ,Location: 161km WNW of Kathmandu, Nepal for more information download the BhooKamp App https://t.co/AzRnQs156f pic.twitter.com/eASKWjRhCi
— National Center for Seismology (@NCS_Earthquake) June 23, 2022
இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் தற்போது வரை வெளியாகவில்லை. முன்னதாக நேற்று ஆப்கானிஸ்தான், மலேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்க டைம்லைன்:
ஜூன் 21 அன்று குஜராத்தில் ஒற்றுமையின் சிலை (Statue Of Unity) எனக் கூறப்படும் வல்லபாய் படேல் சிலைக்கு அருகே 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் கெவாடியா கிராமத்திற்கு தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் இருந்ததாக நிலநடுக்க ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்தது. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் எந்த சேதமும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 22 அன்று அதிகாலை 2.24 மணியளவில் தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து 44 கிமீ தொலைவில் 51 கிமீ ஆழத்தில் 6.1 என்ற ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. தற்போது வரை ஆயிரம் பேர் வரை பலியாகி இருப்பதாக ராய்ட்டர்ஸ் சர்வதேச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்கனின் பக்திகா மாகாணத்தில் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாகவும் 1500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜூன் 22 அன்று ஆப்கனில் ஏற்பட்ட நிலநடுக்கம் பாகிஸ்தானிலும் உணரப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானின் உயிர்ச்சேத மற்றும் பொருட்சேத விவரங்கள் தற்போது வரை வெளியிடப்படவில்லை.
ஜூன் 22 அன்று நள்ளிரவில் மலேசியாவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 561 கிலோ மீட்டர் தொலைவில் நள்ளிரவு 12.38 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். ஆனால் உயிர்ச்சேதம் எதுவும் தற்போது வரை பதிவாகவில்லை.
ஜூன் 23 – இன்று அதிகாலை 5 மணியளவில் கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 3.4 ஆக பதிவானது. அதேபோல, குடகு மாவட்டத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள், வீட்டில் இருந்து அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். சுமார் 1 நிமிடத்துக்கு இந்த நிலநடுக்கம் நீடித்தது. உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படாத போதிலும், பல வீடுகள் சேதமடைந்தன.
ஜூன் 23 – இன்று நேபாளத்தில் அதிகாலை 3 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து 161 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 4.3 என்ற அளவில் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் உயிர்ச்சேத மற்றும் பொருட்சேத விவரங்கள் தற்போது வரை வெளியிடப்படவில்லை.
என்ன காரணம்?
தெற்காசியாவின் பல்வேறு பகுதியில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில் இதற்கான காரணங்கள் குறித்து புவியியல் வல்லுநர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்திய நிலப்பலகை (Indian tectonic plate) ஐரோப்பா- ஆசியாவை உள்ளடக்கிய யூரேசிய நிலப்பலகையுடன் (Eurasian plate) வடக்கு நோக்கி தள்ளுவது மோதுவது இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் இந்த நிலநடுக்கங்கள் இன்னும் சில நாட்களுக்கு தொடர வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கின்றனர் புவியியல் வல்லுநர்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM