ஆப்கன் நிலநடுக்கம் ஆயிரம் பேர் பலி: சர்வதேச நாடுகள் உதவியை கோரும் தாலிபான் அரசு

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 1,000 பேர் உயிரிழந்ததை அடுத்து சர்வதேச நாடுகளின் உதவியை தலிபான்கள் கோரியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் நேற்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து 44 கிமீ தொலைவில் 51 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்தது. மக்கள்தொகை அடர்த்திமிக்க பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் உயிர்ச்சேதங்கள் மிக அதிகமாக இருக்கும் என வல்லுநர்கள் துவக்கத்திலேயே தெரிவித்தனர். தற்போது வரை ஆயிரம் பேர் வரை பலியாகி இருப்பதாக ராய்ட்டர்ஸ் சர்வதேச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்கனின் பக்திகா மாகாணத்தில் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாகவும் 1500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் ஆப்கானிஸ்தான் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் முகமது நாசிம் ஹக்கானி கூறினார்.மலைக்கிராமங்களில் நிலநடுக்கச் சேத விவரங்கள் தற்போது வரை தெளிவாக தெரியவில்லை என்றும் இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியுள்ளதால் மீட்புப்பணிகள் மிகக் கடினமாகப் இருப்பதாகவும் ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தின் வீரியம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதாலும், அது மக்கள் அடர்த்தி மிக்க பகுதிகளில் நிகழ்ந்துள்ளாதாலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என ஆப்கன் அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். பாகிஸ்தானின் உயிர்ச்சேத மற்றும் பொருட்சேத விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் ஆப்கானிஸ்தானும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கடந்த ஆண்டு தலிபான் கையகப்படுத்துதலுக்கு பதிலளிக்கும் விதமாக, பல நாடுகள் ஆப்கானிஸ்தானின் வங்கித் துறையின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதனால் இக்கட்டான தருணத்தில் சர்வதேச நாடுகள் உதவி செய்யுமாறு ஆப்கன் அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.