முகத்திற்கு நேராக ஓ.பி.எஸ்-ஐ நோகடித்த சீனியர்கள்: அ.தி.மு.க பொதுக் குழு ஹைலைட்ஸ்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூறாவளியாக வீசிவரும் நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம், உயர் நீதிமன்ற உத்தரவு, மேல்முறையீடு உத்தரவுகளுக்கு பிறகு நடைபெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், பரபரப்பாக நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்-ஐ சீனியர்கள் பலரும் நோகடித்த சம்பவம் கவனத்தைப் பெற்றுள்ளது.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் உள்ளனர். கடந்த ஜூன் 14 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் பலரும் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று குரல் எழுப்பினர். பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை குறித்து முடிவெடுக்கப்படும் என்று அதிமுக நிர்வாகிகள் பலரும் ஊடகங்களில் தெரிவித்தனர்.

ஒற்றைத் தலைமை விவகாரம் எழுப்பப்பட்டதில் இருந்து ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே மோதல் நடந்து வருகிறது. இருவரும் தனித் தனியே தங்கள் ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருந்தது. ஓ.பி.எஸ் ஆதரவாளர்களாக அறியப்பட்ட சிலரும் இ.பி.எஸ் ஆதரவாளர்களாக மாறினார்கள்.

இதைத் தொடர்ந்து, ஒற்றைத் தலைமை தேவையில்லை என்று கூறிய ஓ.பி.எஸ் பொதுக்குழுவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி உள்ளிட்டோர் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் தரப்பில் காரசாரமான வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

ஓ.பி.எஸ் தரப்பில் பொதுக்குழு நடத்தலாம், ஆனால், ஏற்கெனவே முன்மொழியப்பட்ட 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்று வாதிடப்பட்டது. இ.பி.எஸ் தரப்பில், பொதுக்குழுவில் என்ன தீர்மானம் வேண்டுமானாலும் நிறைவேற்றலாம். பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும், பொதுக்குழுவில் கட்சியின் சட்டவிதிகளைத் திருத்த, தீர்மானங்களை நிறைவேற்ற எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது ஓ.பி.எஸ்-க்கு பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஓ.பி.எஸ் தரப்பு பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, நேற்று (ஜூன் 22) இரவே மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேல் முறையீடு வழக்கை விடியவிடிய விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியர் அடங்கிய அமர்வு, அதிகாலை 4.20 மணிக்கு தீர்ப்பளித்தனர். அதில், அதிமுக பொதுக்குழு நடத்த எந்த தடையும் இல்லை. பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கலாம். மேலும் 23 தீர்மானங்களை தவிர வேறு புதிய தீர்மானங்கள் குறித்து முடிவு எடுக்கக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில், இன்று காலையில் இருந்தே பொதுக்குழு உறுப்பினர்கள் வருகை தந்தனர்.

பொதுக்குழு கூட்டம் தொடர்பாக தீர்ப்பு தனக்கு சாதகமாக வந்ததால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து, பொதுக்குழு கூட்டத்திற்கு புறப்பட்டார். வழியெங்கும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மலர்தூவி வரவேற்பு அளிக்க 2 மணி நேரத்துக்கு பிறகு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்துக்கு சென்றார்.

ஓ.பி.எஸ் வாகனம் பொதுக்கூட்டம் நடைபெறும் திருமண மண்டபத்துக்கு சென்றபோது, அங்கே இருந்த ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அவரை ஆதரித்து முழக்கமிட்டனர். அப்போது, அங்கே இருந்த இ.பி.எஸ் ஆதரவாளர்கள் இ.பி.எஸ்-ஐ ஆதரித்து முழக்கமிட்டனர். இருதரப்பினரும் மாறி மாறி போட்டிபோட்டு முழக்கமிட்டனர். மேலும், இ.பி.எஸ் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக முழக்கமிட்டதால் பொதுக்குழு கூட்ட அரங்கு பரபரப்பானது.

இதனால், அதிமுக பொதுக்குழுவில் ஓ.பி.எஸ் – இ.பி.ஸ் இரு தரப்பு ஆதரவு உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இதையடுத்து, பொதுக்குழு உறுப்பினர்கள் அமைதி காக்க அதிமுக மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் அதிமுக பொதுக்குழு நடைபெறும் வானகரம் பகுதிக்கு வந்தார். அப்போது, இ.பி.எஸ்-ஐ வரவேற்று அதிமுக தொண்டர்கள் ஆதரவாக முழக்கமிட்டனர்.

இ.பி.எஸ் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்துக்கு வந்தபோது, அதிமுக தொண்டர்கள் அவருடைய வாகனத்தை சூழ்ந்துகொண்டு ஆதரவாக முழக்கமிட்டனர்.

பொதுக்குழுவுக்கு வருகை தந்தபோது ஓ.பி.எஸ்-ஐ அதிமுக சீனியர்கள் வரவேற்கவில்லை. ஆனால், இ.பி.எஸ் வந்தபோது, மூத்த நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் வாசலில் இருந்தும், ஓ.பி.எஸ்ஸை வரவேற்காதது குறிப்பிடத்தக்கது.

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக்கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய பொதுக்குழுக் கூட்டம் காலை 11.30 மணிக்கு தொடங்கியது.

பொதுக்குழு உறுப்பினர்கள் தொடர்ந்து ஓ.பி.எஸ்-க்கு எதிராக முழக்கமிட்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஓ.பி.எஸ்-க்கு எதிராக முழக்கமிட்ட உறுப்பினர்களை முன்னாள் அமைச்சர் வளர்மதி சமாதானப்படுத்தினார்.

பொதுக்குழு மேடைக்கு வந்த ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இருவரையும் அதிமுகவின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற மேடையில் ஒருபுறம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், மறுபுறம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அமர, இருவருக்கும் நடுவில், கட்சியின் தற்காலிக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அமர்ந்திருந்தார்.

பொதுக்குழுவில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், “அனைத்து தீர்மானங்களையும் இந்த பொதுக்குழு நிராகரிக்கிறது, நிராகரிக்கிறது, நிராகரிக்கிறது” என்று கூறினார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து பேசிய சி.விசண்முகம், ” இரட்டை தலைமையால் திமுகவை எதிர்த்து செயல்பட முடியாத நிலை உள்ளது. இரட்டை தலைமையின் செயல்பாட்டில் ஒருங்கிணைப்பு இல்லை. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலிலதா போன்று ஒற்றை தலைமை ஏற்பட வேண்டும். எனவே பொதுக் குழுவில் இரட்டை தலைமை ரத்து செய்து விட்டு ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க வேண்டும். அடுத்து பொதுக்குழு தேதியை அறிவிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்று மீண்டும் ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூடும் என்று அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார்.

அதே போல, அதிமுக பொதுகுழுவில் கொண்டுவரப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, “ஒன்றரைக் கோடி தொண்டர்களால் பரிந்துரைக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் 2,600 பேர் ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று மனு கொடுத்திருக்கிறார்கள். அப்படி கொடுக்கப்பட்ட மனுவின் மீதுதான், வருகிற 11 ஆம் தேதி நடைபெற இருக்கிற பொதுக்குழுவில் அது ஒரு தீர்மானமாக கொண்டுவர இருக்கிறோம். இதில் எந்தவித மாற்றமும் இருக்காது. வருகிற 11 ஆம் தேதி நடக்க இருக்கிற பொதுக்குழுவில், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக உருவாகுவார். இந்த ஒன்றரைக் கோடி தொண்டர்களால் அவர் உருவாக்கப்படுவார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.

இதனிடையே, பொதுக்குழு கூட்ட மேடையில் ஓ.பி.எஸ் அருகே அமர்ந்திருந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ஓ.பி.எஸ் உடன் பேசிவிட்டு, மேடையில், சட்டத்துக்கு விரோதமாகக் கொண்டுவரப்படும் இந்த தீர்மானங்களை புறக்கணித்து ஓ.பி.எஸ் வெளியேறுவதாகக் கூறி இருவரும் பொதுக்குழு கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறினார்கள்.

அதன் பிறகு, பொதுக்குழு மேடையில், இ.பி.எஸ் ஆதரவு உறுப்பினர்கள், அவருக்கு வெள்ளிக்கிரீடம் மற்றும் வாளைக் கொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இவ்வாறு அதிமுக பொதுக்குழு கூட்டம், நீதிமன்ற உத்தரவு, கோஷ்டி மோதல் என பரபரப்பாக நடந்து முடிந்தது.

பொதுக்குழு கூட்டத்தில், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உட்பட பொதுக்குழுவில் பேசிய எவரும் ஓ.பி.எஸ் பெயரை குறிப்பிடவில்லை. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்-ஐ சீனியர் நிர்வாகிகள் பலரும் வரவேற்காமல் அவரை மனம் நோகடித்த சம்பவம் கவனத்தைப் பெற்றுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.