நெதர்லாந்தைச் சேர்ந்தவர் டச்சு மருத்துவர் திஜ்ஸ் வான் டெர் ஹில்ஸ்ட் ( Thijs van der Hilst). பிசியோதெரப்பிஸ்ட் ஆன இவர் கடந்த 15 வருடங்களாக ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.
இவரது ஆராய்ச்சியின் முடிவில் ஒரு பிரத்தியேகமான தலையணையை தயாரித்தார். இந்த தலையணையின் சிறப்பம்சம் என்னவென்றால் அதில் பயன்படுத்தப்பட்ட பருத்தி பஞ்சு எகிப்து தேசத்தில் இருந்து வரவழைக்கப்பட்டதாம். அதேபோல் பஞ்சுகளை அடைக்க மல்பெரி பட்டு நூலால் நெய்த பட்டுத்துணியை பயன்படுத்தியுள்ளனராம்.
இது என்ன பிரமாதம் என்று எண்ணுவோருக்கு அடுத்த ஷாக் வருகிறது. இந்த தலையணையில் தங்க இழைகள் நூற்கப்பட்டுள்ளனவாம். அதற்கும் மேல் ஜிப் வரும் இடத்தில் 4 விலையுயர்ந்த வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளனவாம்.
இந்த சிறப்பம்சங்களுக்கு மேலாக தலையணையின் உருவ அமைப்பு மிகவும் பிரத்தியேகமாக தலையை வைத்தால் அந்த தலைக்காகவே செய்யப்பட்ட கட்சிதமான தலையணை போன்ற உணர்வை தருமாம்.
கழுத்து நரம்புகளையும் கழுத்து எலும்பையும் இளைப்பாற வைக்குமாறு பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இந்த தலையணையின் விலை என்னவென்று தெரியுமா?
57000 டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் 47 லட்சம் ரூபாயாம். இந்த தலையணையில் என்னதான் தங்கம் வைரம், வைடூரியம் பதித்திருந்தாலும் உடல் வருத்தி உழைத்து அதனால் ஏற்படும் அலுப்பு காரணமாக வரும் அசதியான தூக்கம் தரும் சுகத்தை இது தருமா என்பது கேள்விக்குறிதான்.
மனஉளைச்சல், தூக்கமின்மைபோன்ற விஷயங்களால் கஷ்டப்படும் மனிதர்களுக்கு 47 லட்சம் பணம் செலவளித்து வாங்கி பயன்படுத்தும் இந்த தலையணையால் பணம் செலவாகிவிட்டதே என்ற வருத்தமும் சேர்ந்து நோயாய் உள்ளுக்குள் உறுத்தும் எனவும் சிலர் எண்ணுகின்றனர்.