இந்தியா, மலேசியா, ஆப்கானிஸ்தான் போன்ற உலகின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுவருகிறது.
கர்நாடகா:
இந்தியாவில் கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது சுற்றி 50 கி.மீ தொலைவுக்கு உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மக்கள் அச்சத்தில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளுக்கு வந்தனர். இது தொடர்பாக கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் மிதமானது. இவ்வகை நிலநடுக்கம் மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. தீவிர பூகம்பம் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே மக்கள் பயப்படத் தேவையில்லை” என்று கூறியுள்ளது.
மலேசியா:-
மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து மேற்கு திசையில் 561 கி.மீ தொலைவில், நேற்று நள்ளிரவு 12.38 மணி அளவில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் காரணமாக அந்தப் பகுதி மக்கள் தங்களின் குடியிருப்புகளிலிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.
ஆப்கன்:
ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 1,000 பேர் வரை உயிரிழந்திருப்பதாகவும், 1,500-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருப்பதாகவும் பக்திகா மாகாணத்தின் அரசு செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், கட்டட இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 334 கி.மீ. தொலைவிலும், ஜம்மு காஷ்மீரிலிருந்து 445 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்ததாக இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.