புதிய கல்விக் கொள்கையில் பல நன்மைகள்: அனைத்து மாநிலங்களும் பின்பற்ற தமிழிசை அறிவுறுத்தல்

புதுச்சேரி: பல நன்மைகள் இருப்பதால் புதிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் இந்தியாவில் அதிகமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அதனால்தான் பிரதமர் எப்போதும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். புதிய கல்வி கொள்கை குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்குவதை வலியுறுத்துகிறது. இதுவே, பிரதமரின் தொலைநோக்கு பார்வை.

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து என்பது அவர்களது உடலை பாதுகாக்க மட்டுமல்ல படிப்பில் கவனம் செலுத்தவும் உதவுகிறது. குழந்தைகளை மகிழ்ச்சியாக வைக்கிறது.

நாம் புதிய கல்வியை ஏன் ஆதரிக்கிறோம் என்றால், குழந்தைகளுடைய ஊட்டச்சத்து உணவு, கல்வி ஆகிய இரண்டையும் கொள்கையாக கொண்டுள்ளது. பல இடங்களில் குழந்தைகளுக்கு காலை உணவு கிடைப்பதில்லை. அதனால் காலை உணவையும் கொடுக்க வேண்டும் என்பதே புதிய கல்வி கொள்கையின் ஒரு கொள்கை.

இது தற்காப்பு கலைக்கும் வழி வகை செய்துள்ளது. கல்வி, கலாசாரம், சுகாதாரம் இவற்றையெல்லாம் ஒன்றாக எடுத்து செல்வதுதான் புதிய கல்வி கொள்கை. இதை முழுவதுமாக அறிந்து, அதில் உள்ள அனைத்து நல்லதையும் மாநிலங்கள் பின்பற்ற வேண்டும். பொதுவாக புதிய கல்வி கொள்கையை பின்பற்ற மாட்டோம், எதிர்க்கிறோம் என்று சில மாநிலங்கள் கூறுகிறார்கள்.

புதிய கல்வி கொள்கையை எல்லா மாநிலங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இக்கொள்கையை படிக்காமல் நான் கூறவில்லை. தெலங்கானாவில் உள்ள 14 பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் தொடர்ந்து பல கூட்டம் நடத்தியுள்ளேன்.

புதிய கல்வி கொள்கை எவ்வளவு நல்லது என அறிந்து, பல ஆராய்ச்சி கட்டுரைகள் பலர் சமர்ப்பித்துள்ளார்கள். இந்த புதிய கல்வி கொள்கையில் பல நன்மைகள் உள்ளது. இதை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.