உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் அமைந்திருக்கும் ராம் கி பைடி மலைத் தொடரில் ஒரு தம்பதியினர் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது கணவர் தன் மனைவியை முத்தமிட முற்பட்டார். அதைக் கண்ட அருகிலிருந்தவர்கள் அந்த நபரைச் சரமாரியாகத் தாக்கியிருக்கின்றனர்.
சரயு நதி உத்தரப்பிரதேசத்தில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இது உத்தரகாண்ட மாநிலம், பாகேஷ்வர் இமயமலை மாவட்டத்தின் வடக்கே அமைந்துள்ள சர்முலிலிருந்து உருவாகிறது. சரயு நதிக்கரையில் அயோத்தி அமைந்திருப்பதால் சரயு நதி ராமருடன் தொடர்புடையது எனக் கூறப்படுகிறது. இதனை பலரும் புனித நீராக கருதி குளித்து வருகின்றனர். அதனால் உள்ளூர் வாசிகள் அந்த நபரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மனைவியை முத்தமிட முயன்ற நபர் தாக்கப்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, இது குறித்து ஊடகங்களிடம் பேசிய அயோத்தியின் மூத்த காவல் அதிகாரி ஷைலேஷ் பாண்டே, “இந்த வீடியோ ஒரு வாரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட பழைய வீடியோ. இந்தச் சம்பவம் தொடர்பாக எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. இந்தத் தம்பதியினரை அடையாளம்காண போலீஸார் முயன்று வருகின்றனர். இந்த விஷயத்தில் ஏதேனும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டால், தாக்குதல் நடத்தியவர்கள்மீது உரியச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.