இந்திய ராணுவத்தில் புதிய முறையில் ஆள்சேர்க்கும் விதமாக, `அக்னிபத்’ எனும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டத்துக்கு எதிராக அரசியல் தலைவர்கள் பலரும் மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர்.
இந்தத் திட்டத்துக்கு எதிராக பீகார், மேற்கு வங்கம், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டங்கள் நடந்தன. அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் ரயில் எரிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டனர். இதனால் ரயில்வே துறைக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக ரயில்வேதுறை, “அக்னிபத் போராட்டம் காரணமாக சுமார் அறுபது கோடி பயணிகள் ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்துள்ளனர். நாடு முழுவதும் அக்னிபத் திட்டத்தைக் கண்டித்து நடைபெற்ற போராட்டங்களால் ரூபாய் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ரயில்வே துறைக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. சாதாரண ரயில் பெட்டியை தயாரிக்க ரூ.80 லட்சமும், பயணிகள் உறங்கும் வசதியுடன் கூடிய ரயில் பெட்டியைத் தயாரிக்க ரூ.1.25 கோடியும், ஏசி வசதியுடன் கூடிய ரயில் பெட்டியை தயாரிக்க ரூ. 3.5 கோடி செலவாகும்.
மேலும் ஒரு ரயில் இன்ஜினை தயாரிக்க அரசு தரப்பிலிருந்து ரூ.20 கோடிக்கும் அதிகமான தொகை செலவு செய்யப்படுகிறது. 12 பெட்டிகளைக்கொண்ட ரயிலை உருவாக்க ரூ.40 கோடிக்கும் அதிகமான தொகையும், 24 பெட்டிகளைக்கொண்டதை உருவாக்க ரூ.70 கோடிக்கும் அதிகமாக செலவு செய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.