சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தகவல் அலைபேசி வாயிலாகச் சென்றிருக்கிறது. அதில், எதிர்முனையில் பேசிய நபர், தாம்பரம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்திருக்கிறார். பதறிப்போன காவல் அதிகாரிகள் உடனே ரயில்வே போலீஸாருக்குத் தகவல் அளித்து அலர்ட் செய்திருக்கின்றனர். அதன் மூலம் ரயில்வே போலீஸாரும் மோப்ப நாய்கள், வெடிகுண்டு கண்டறியும் கருவி உதவியுடன் ரயிலில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர்.
ஒரு கட்டத்தில் கிடைத்த தகவல் பொய்யானது என்று தெரிந்தவுடன் சம்பந்தப்பட்ட மர்ம ஆசாமி யார் என்று அந்த செல்போனை ட்ராக் செய்தபோது, அந்த எண் சேலத்தை காட்டியிருக்கிறது. அதையடுத்து சேலம் போலீஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டு, போலீஸார் சம்பந்தப்பட்ட மர்ம ஆசாமியை பிடித்திருக்கின்றனர்.
பிடிபட்ட நபர் சேலத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்றும், டிரைவராக இருப்பதும் தெரியவந்தது. அவரிடம் போலீஸார் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. கடந்த 2019-ம் ஆண்டு சேலையூரில் அவர் வசித்து வந்தபோது அவர் மனைவியுடன் அவருக்குத் தகராறு ஏற்பட்டு, தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் மனைவி புகார் அளித்திருக்கிறார்.
இதற்காக போலீஸார் விசாரணைக்கு வரக் கூறி அடிக்கடி போன் செய்து மன சங்கடத்தை ஏற்படுத்தியதாகவும், இதனால் அவர் குடி போதையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்புகொண்டு எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் வினோத்குமார் தெரிவித்திருக்கிறார். மேலும் இதன் காரணமாகச் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வந்த அவர், மீண்டும் குடும்பத் தகராறு ஏற்பட்டதால் மது அருந்திவிட்டு மீண்டும் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குக் குண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார்.
அதையடுத்து, தொடர்ச்சியாக மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துவரும் வினோத்தை போலீஸார் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.