வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, 64, இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்களை அவர் புதுடில்லியில் நேற்று சந்தித்தார்.
அரசியல் வாழ்க்கை
ஒடிசாவின் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு, உள்ளாட்சி கவுன்சிலராக தன் அரசியல் வாழ்க்கையை துவங்கி, படிப்படியாக உயர்ந்து ஜார்க்கண்ட் மாநில கவர்னராக பதவி வகித்தார். தற்போது, தே.ஜ., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வரும் முர்மு, ஒடிசாவில் இருந்து நேற்று புறப்பட்டு புதுடில்லி வந்தார்; இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
வேட்பு மனு தாக்கலின் போது, திரவுபதி முர்முவின் பெயரை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிவார் என கூறப்படுகிறது. தே.ஜ., கூட்டணியில் இடம்பெற்றுள்ள மத்திய அமைச்சர்கள் வழிமொழிவர் என எதிர்பார்க்கப்படுகிறது.முர்முவின் வேட்பு மனுவை தயாரிக்கும் பணியில் பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று புதுடில்லி வந்த திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன் பின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் பா.ஜ., மூத்த தலைவர்களை சந்தித்தார். இந்நிலையில், சமூக வலைதள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதாவது:திரவுபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருப்பதை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். நாட்டில் நிலவி வரும் அடிமட்ட பிரச்னைகள் பற்றிய அவரது புரிதல் மற்றும் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை சிறப்பானது.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆதரவு
‘ஒடிசாவைச் சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் முர்முவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்’ என, பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்து உள்ளார்.வேட்பு மனு தாக்கலின் போது, ஒடிசாவைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் புதுடில்லி வருவர் என்றும் அவர் உறுதி அளித்துஉள்ளார்.
Advertisement