மகாராஷ்டிராவில் அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் தங்கியிருக்கின்றனர். ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு கொடுக்கும் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. புதிதாக மூன்று சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் உட்பட நான்கு பேர் அஸ்ஸாம் வந்திருக்கின்றனர் என்றும், மேலும் மூன்று பேர் விரைவில் வந்து சேருவார்கள் என்றும் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ தீபக் கேஸ்கர் தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத்,`நான் எந்த அணி குறித்தும் கருத்து தெரிவிக்கவில்லை.
எங்களுடன் அஸ்ஸாமில் இருப்பவர்களில் 20 எம்.எல்.ஏ-க்கள் தொடர்பில் இருக்கின்றனர். அவர்கள் மும்பை வந்தவுடன் உண்மை தெரியவரும்’ என்று தெரிவித்தார். மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை கிடைத்தவுடன் சிவசேனாவின் தேர்தல் சின்னமான வில் அம்புக்கும் உரிமை கோர ஏக்நாத் ஷிண்டே திட்டமிட்டிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அஸ்ஸாமின் கவுஹாத்தியிலுள்ள ரேடிஸ்ஸன் புளூ ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கும் அவர்கள், அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது குறித்து பா.ஜ.க தலைமையுடன் கலந்தாலோசித்துவருகின்றனர்.
37 எம்.எம்.ஏ-க்களின் ஆதரவு கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க ஏக்நாத் ஷிண்டே திட்டமிட்டிருக்கிறார். இதற்கிடையே அஸ்ஸாமில் மழை வெள்ளத்தில் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மீட்புப்பணி மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபடாமல் மாநில அரசு மகாராஷ்டிரா அரசை கவிழ்க்கும் வேலையில் ஈடுபட்டிருப்பதாகக் கூறி இன்று திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் சிவசேனா அதிருப்தி எம்.எம்.ஏ-க்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊடகங்களிடம், “அஸ்ஸாமில் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு உதவாமல் அனைத்து நிதி ஆதாரங்களையும் கொண்டு மகாராஷ்டிரா அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஈடுபட்டுவருகிறார்” எனத் தெரிவித்தனர்.