திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள பயஸ் டென்த் கான்வென்டில் தங்கியிருந்த அபயா என்ற கன்னியாஸ்திரி கடந்த 1992ம் ஆண்டு கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து, சிபிஐ நடத்திய விசாரணையில் கன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவந்தது.இது தொடர்பாக பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகிய 3 பேரை சிபிஐ கைது செய்தது. இந்த வழக்கில் 27 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் பாதிரியார் தாமஸ், கன்னியாஸ்திரி செபிக்கும் தண்டனை விதிக்கப்பட்டது. தாமசுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ₹7 லட்சம் அபராதமும், செபிக்கு ஆயுள் தண்டனையும் ₹5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இவர்கள் திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த தண்டனையை எதிர்த்து இருவரும் மேல்முறையீடு செய்த வழக்கை விசாரித்த, கேரள உயர் நீதிமன்றம், 2 பேருக்கும் நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும், 2 பேரின் தண்டனையையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டது.