புதுடெல்லி: மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பிறகு, தீவிரவாதம் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்காக, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) என்ற தனி அமைப்பை ஒன்றிய அரசு அமைத்தது. இதன் இயக்குனராக இருந்து வந்த ஒ.சி.மோடி கடந்தாண்டு மே மாதம் ஓய்வு பெற்றார். அதன் பிறகு இந்த பதவிக்கு நிரந்தர இயக்குனர் நியமிக்கப்படவில்லை. சிஆர்பிஎப் படையின் இயக்குனர் ஜெனரல் குல்தீப் சிங், இந்த பதவியை தற்காலிகமாக கவனித்து வந்தார்.இந்நிலையில், இதன் இயக்குனர் பதவிக்கு பஞ்சாப் மாநில முன்னாள் டிஜிபி.யான தின்கர் குப்தாவை ஒன்றிய அரசு நேற்றிரவு நியமித்தது. இவர் இப்பதவியில் 2024ம் ஆண்டு, மார்ச் 31ம் தேதி வரை நீடிப்பார். 1987ம் ஆண்டைய பஞ்சாப் ஐபிஎஸ் பிரிவை சேர்ந்த இவர், பஞ்சாப் மட்டுமின்றி ஒன்றிய அரசிலும் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.