Anbil Mahesh says till now 2 lakh pupils join Government school: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில், திருவெறும்பூர், மருங்காபுரி, மணப்பாறை, வையம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அந்தந்த பகுதிகளை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தலைவர்களிடம் நேரில் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவித்து நற்சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்; திருச்சி மாவட்டத்தில் உள்ள 54 பள்ளிகளில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். +2 வகுப்பில் 13 பள்ளிகளில் 100% மாணவ-மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: கவுன்சலிங் போறீங்களா? தமிழக டாப் 10 பொறியியல் கல்லூரிகள் இவை!
ஆகவேதான் பள்ளி தலைமை ஆசிரியர்களையும், மாணவர்களையும் ஆட்சியர் அலுவலகத்தில் அழைத்து பாராட்டுகிறோம். தமிழகத்திலேயே மைக்ரோபயாலஜியில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவியால் நமக்கு மிகுந்த பெருமைதான். வருங்காலத்தில் கல்வித்துறையில் பள்ளிக்கூடத்தை மேம்படுத்துவதாக இருந்தாலும், ஆசியர்களை உற்சாகப்படுத்துவது ஆக இருந்தாலும் சரி, சிறந்த மாணவர்களை உற்சாகப்படுத்துவது ஆக இருந்தாலும் சரி இது போன்ற நிகழ்ச்சிகள் அதிகம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்திருக்கிறேன்.
இதுவரை அரசு பள்ளிகளில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு சுமார் 6 லட்சம் மாணவர்கள் சேர்க்கை இருந்தது. இந்த வருடம் அந்த இலக்கை அடையும் சூழல் உள்ளது. பல திட்டங்களை நம் கொண்டு வருகிறோம். அது 7.5 சதவீத இடஒதுக்கீடாக இருந்தாலும் சரி, காலை சிற்றுண்டி வழங்குவதாக இருந்தாலும் சரி, அதேபோல் மாணவர்களை மேம்படுத்தும் விதமாக மாதம் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தையும் கொண்டு வந்திருக்கின்றோம்.
இதேபோல் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கின்றவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகின்றது. உயர் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் என்னென்ன கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து அவை கொடுத்தால் அரசு பள்ளிகளை முதலில் தேடி வருவார்கள் என்பதை முதல்வர் அறிந்து கல்வித்துறையில் பல திட்டங்களையும், மாற்றங்களையும் கொண்டு வருகிறார்.
மதுரையில் எண்ணும் எழுத்தும் என்ற ஒரு திட்டத்தை துவக்கி வைத்திருக்கிறேன். இதன் மதிப்பு 2025-ல் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மற்றும் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு அடிப்படையாக தமிழாக இருந்தாலும், ஆங்கிலம் இருந்தாலும், எழுதவும் படிக்கவும் அடிப்படை கணக்குகளை அவர்கள் தெரிந்து கொள்வதில் மிகப்பெரிய முன்னேற்றத்தை தமிழகம் அடையும்.
தமிழகம் முழுவதும் உள்ள பழமை வாய்ந்த, இடியும் தன்மை உள்ள பள்ளிக் கட்டிடங்களில் அமர்ந்து படிக்கக் கூடாது என சொல்லி இருக்கிறோம். பழமை வாய்ந்த பள்ளிக்கூடங்களுக்கு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதிக்குள் நிதிகள் ஒதுக்கி, வேலைகள் ஆரம்பிக்கப்படவிருக்கின்றது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அமைச்சரிடம் பேசி உள்ளேன். மற்ற துறைகளுக்கு கட்டிடம் கட்டுவதை விடவும் எங்களது கல்வித்துறைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளேன். நிதிகள் ஒதுக்கீடு செய்ய, செய்ய எந்தெந்த பள்ளிகளுக்கு தேவையோ அந்தந்த பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் துவங்கப்படும். ஒவ்வொரு மாவட்ட ஆட்சித்தலைவரிடமும் இதுகுறித்து பேசி பொது நிதியாக இருந்தாலும் சரி, அதனை கொண்டு எங்கெங்கெல்லாம் உடனடியாக கட்டடங்கள் கட்ட வேண்டுமோ, எங்கெல்லாம் கழிவறை தேவையோ அதற்கு செவிசாய்த்து கட்டி தருவதற்கான கோரிக்கை வைத்துள்ளோம்.
என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் நிதியையும், அன்பழகன் மேம்பாட்டு திட்டத்தின் நிதி வரும் வரையில் என்னென்ன செய்ய வேண்டுமோ அதை கண்டிப்பாக செய்வோம் எனத் தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்