குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்துக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினை கவரும் வகையில், புதிய முயற்சியை மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு மேற்கொண்டுள்ளது.
ரூ.1.15 லட்சம் கோடி
பா.ஜ., ஆளும் குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச சட்டசபைகளுக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. இங்கு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ., ஏற்கனவே பிரசாரங்களை துவக்கிஉள்ளது.இந்நிலையில், இந்த மாநிலங்களில் உள்ள, ஓ.பி.சி., பிரிவினரைக் கவரும் வகையில் புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. தற்போது மத்திய அரசு திட்டங்களில், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு என, சிறப்பு மத்திய உதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களில், ஒரு குறிப்பிட்ட தொகை, இந்தப் பிரிவினரின் நலனுக்காக செலவிடப்படும்.நடப்பு, 2022 – 2023ம் நிதியாண்டில், எஸ்.சி., பிரிவினர் நலனுக்காக மட்டும், 1.15 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுஉள்ளது. இதே பாணியில், ஓ.பி.சி., பிரிவினருக்கும் குறிப்பிட்ட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பிரதமர் அலுவலகம், நிடி ஆயோக், மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் ஆய்வு செய்து வருகின்றன. விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும்.
மக்கள் தொகை
கடந்த, 2018 – 2019ல் ஓ.பி.சி., பிரிவினர் நலன் தொடர்பான பார்லிமென்ட் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது. மண்டல் கமிஷன் அறிக்கையின்படி, மொத்த மக்கள் தொகையில், ஓ.பி.சி., பிரிவினர், 52 சதவீதம் உள்ளனர். 2004 – 2005ல் எடுக்கப்பட்ட மாதிரி கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகையில், ஓ.பி.சி., பிரிவினர், 41 சதவீதம் உள்ளனர். ஆனால், சமூக நீதி அமைச்சகம் சார்பில் செலவிடப்படும் தொகையில், 18 – 20 சதவீதம் மட்டுமே இந்தப் பிரிவினருக்கு கிடைப்பதாக, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஓ.பி.சி., பிரிவினரில் வறுமை மற்றும் வேலை வாய்ப்பின்மை அதிகமாக இருப்பதாகவும், இதில் இருந்து அவர்களை மீட்க, இந்தப் பிரிவினருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், ஓ.பி.சி., பிரிவினரை அடையாளம் கண்டு பட்டியலிடும் உரிமையை மீண்டும் மாநிலங்களுக்கே வழங்கி, பார்லிமென்டில் கடந்தாண்டு ஆகஸ்டில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
பல்வேறு நடவடிக்கை
எந்த ஜாதியையும், ஓ.பி.சி., பிரிவில் சேர்க்கும் அதிகாரமும் மாநிலங்களுக்கு உள்ளது. இதன்படி, குஜராத்தில் முக்கியமான படேல் சமூகத்தினர் இந்தப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். வேறு எந்த ஜாதிகளை ஓ.பி.சி., பிரிவில் இணைப்பது என்பதை ஆய்வு செய்ய குழு ஒன்றையும் குஜராத் அரசு அமைத்துள்ளது.அரசியல் ரீதியிலும், பா.ஜ., பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராடிய ஹர்திக் படேல் காங்கிரசில் இருந்து விலகி சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்துஉள்ளார். இதுபோல, பல்வேறு கட்சிகளில் இருந்து, ஓ.பி.சி., பிரிவைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் பா.ஜ.,வில் இணைந்துஉள்ளனர்.குஜராத்தின், 182 தொகுதிகளில், 70ல் வெற்றித் தோல்வியை தீர்மானிக்கும் நிலையில் ஓ.பி.சி., பிரிவினர் உள்ளனர். ஹிமாச்சல பிரதேசத்திலும், மக்கள் தொகையில், 18 சதவீதம் பேர், ஓ.பி.சி., பிரிவைச் சேர்ந்தவர்கள்.இந்தப் பிரிவினர் நலனுக்காக, பா.ஜ., அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது, குஜராத், ஹிமாச்சலில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த புதிய முயற்சியை பா.ஜ., அரசு எடுத்துள்ளது.
– நமது சிறப்பு நிருபர் –