சென்னை: ‘திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயிருக்கிறார்களே தவிர திமுக அழிந்ததாக வரலாறு கிடையாது’ என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் பேத்தி தீப்தி – வஷ்வக்சேனா ஆகியோர் திருமணம், சென்னை திருவான்மியூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் பேசியதாவது:
இந்த பெரிய மண்டபத்தில் நம் வீட்டு திருமணம்போல் எண்ணி நாம் பங்கேற்றுள்ளோம். இன்னொரு பக்கம் திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். அந்தப் பிரச்சினைக்குள் எல்லாம் போக விரும்பவில்லை. அதில் நாம் தலையிட அவசியமே இல்லை. அவர்கள்தான் நம்மை அழிக்க முடிவெடுத்துள்ளார்களாம். திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயிருக்கிறார்களே தவிர, திமுக அழிந்ததாக வரலாறு கிடையாது.
இந்த திருமணம் ஓர் சீர்திருத்த திருமணமாக, ‘திராவிட மாடல்’ திருமண விழாவாக நிறைவேறியிருக்கிறது. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், இருக்கிற இடத்தில் எப்போதும் விசுவாசமாக, நன்றி உணர்வோடு இருந்து பணியாற்றுபவர். எம்ஜிஆர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அமைச்சரவையிலும், இப்போது என் தலைமையிலான அமைச்சரவையிலும் அமைச்சராக இருக்கிறார் என்றால் எந்த அளவுக்கு அவர் தன்னை பொதுப்பணியில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் என்பது தெரியும்.
மருது சகோதரர்கள் போல்
அவர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து பணியாற்றியபோது, தங்கபாண்டியன் மறைவுக்குப் பிறகு அந்த மாவட்டத்துக்கு செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின், கட்சியின் வளர்ச்சிக்காக மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டபோது ஒரு பகுதிக்கு தங்கபாண்டியன் மகன் தங்கம் தென்னரசுவும் மற்றொரு பகுதிக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆரும் மாவட்டச் செயலாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இருவரும் பெரிய மருது, சின்ன மருதுபோல் விளங்குகின்றனர். கே.கே.எஸ்.எஸ்.ஆரின் மருமகன் அருண்குமார், என் வீட்டின் அருகில் வசிக்கிறார். அவர் அடிக்கடி என்னிடம் பேசுவார்.
எங்கெங்கு சரியில்லை, எங்கு நன்றாக இருக்கிறது என்றெல்லாம் தெளிவாக சொல்வார். அவர் சொல்லக்கூடிய கணக்கு சரியாக இருக்கும். தேர்தல் நேரத்தில்கூட, இந்த இடம் சரியில்லை, இந்த இடம் கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கிறது. கொஞ்சம் கவனியுங்கள் என்று சொல்லிவிட்டுச் செல்வார். எதையும் சரியாகச் சொல்வார். அவர் சொல்லும் சினிமாவைக்கூட தட்டாமல் நான் பார்த்துவிடுவேன். அந்த அளவுக்கு எதையும் எடைபோட்டு பேசக்கூடியவர்.
எனக்கும் பேத்திதான்
மணமகள் தீப்தி, கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு மட்டும் பேத்தியல்ல; எனக்கும் பேத்திதான். என் தாயார் தயாளு அம்மாளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, லண்டனுக்கு அழைத்துச் சென்றபோது அருகில் இருந்து எல்லா சிகிச்சைகளுக்கும் துணை நின்றவர் அருண்குமார். அதை என்றைக்கும் மறக்க மாட்டேன். அதனால்தான் கொஞ்சம் உடல் நலிவுற்று ஓய்வில் இருந்தாலும், இந்த திருமணத்துக்கு எப்படியும் வரவேண்டும் என வந்துள்ளேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.