தஞ்சாவூரில் ஜுன் 21-ம் தேதி இரவு மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்ட இளைஞர் இன்று காலை உடலில் பல இடங்களில் குத்துக் காயங்களுடன் ஆற்றங்கரையில் சடலமாக மீட்கப்பட்டார்.அவரது கழுத்தை அறுத்து, அவரது உடலில் பல முறை குத்தி கொடூரமான முறையில் கொலை செய்து அவரது உடலை ஆற்றில் வீசி சென்றுள்ளது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தஞ்சாவூர் கீழவாசல் ஆட்டுமந்தை தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் மனோகரன் (30). கூலித் தொழிலாளியான இவர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு (ஜுன் 21) மாலை வெளியே சென்றுள்ளார். தொடர்ந்து இரவு 10.30 மணியளவில், அவரது நண்பர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து சேப்பநாயக்கன்வாரி அருகே இறக்கிவி;ட்டு சென்றுள்ளார்.
அப்போது அங்கே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் மனோகரனை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். இதுபற்றி மறுநாள் காலை அவரது தாய் வாசுகி அளித்த புகாரின்பேரில், தஞ்சாவூர் நகர மேற்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்டிதம்பட்டு என்ற இடத்தில் (வெட்டிக்காடு பாலம் அருகே) புது ஆறு என அழைக்கப்படும் கல்லணைக் கால்வாயில் அவரது உடல் இன்று காலை கரை ஒதுங்கியது. அவரது கழுத்து அறுக்கப்பட்டு, அவரது உடலில் பல இடங்களில் குத்துக் காயங்கள் இருந்தன.
இதுபற்றி தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து மனோகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக மனோகரன் அவரது எதிரிகளால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“