வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சண்டிகர்: ‘அக்னிபத்’ திட்டத்தின் வாயிலாக ராணுவ பணியில் சேர விண்ணப்பிக்கும் இளைஞர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்க முடிவு செய்து உள்ளதாக ஹரியானாவை சேர்ந்த பல்வேறு ஜாதிகள் விவசாய மாணவ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இளைஞர்களுக்கான நான்காண்டு ராணுவப் பணியான அக்னிபத் திட்டம் குறித்த மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இத்திட்டத்துக்கு நாடு முழுதும் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. இந்நிலையில் ஹரியானாவில் ‘காப் பஞ்சாயத்து’ என்றழைக்கப்படும் பல்வேறு ஜாதிகளின் சங்கங்கள் மற்றும் சில விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கூடி ஆலோசனை நடத்தினர்.
இதில் ஹரியானா மட்டுமின்றி ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஜாதி மற்றும் மாணவர் அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்கு தன்கர் சமூகத்திற்கான தலைவர் ஓம் பிரகாஷ் தன்கர் தலைமை வகித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: அக்னி வீரர்கள் என்ற பெயரில் இளைஞர்களை கூலி தொழிலாளர்களாக பணியமர்த்தும் இந்ததிட்டத்தை நாங்கள் புறக்கணிக்கிறோம். அக்னிபத் திட்டத்தின் வாயிலாக பணியில் சேர விண்ணப்பிக்கும் இளைஞர்கள் சமூகத்தில் இருந்து முழுமையாக ஒதுக்கி வைக்கப்படுவர்.
அவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். இந்த திட்டத்தை ஆதரிக்கும் அரசியல் தலைவர்கள் பெரு நிறுவனங்களையும் புறக்கணிக்க திட்டமிட்டு உள்ளோம். அந்த நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களில் 10 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக உள்ள பொருட்களை வாங்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement