மலேஷியா வரும் தொழிலாளர் நலன் பாதுகாக்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு| Dinamalar

ராமநாதபுரம்: ”மலேஷியா வரும் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளம், இருப்பிட வசதி ஆகியவற்றை உறுதி செய்து, அவர்களின் நலன் பாதுகாக்கப்படும்,” என, அந்நாட்டு தகவல், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ சரவணன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மலேஷியா வாழ் தொழிலதிபர்கள் சந்திப்பு, ராமநாதபுரத்தில் நேற்று நடந்தது. இதில், அந்நாட்டு அமைச்சர் டத்தோ சரவணன் கூறியதாவது: மலேஷியாவில் கொரோனா காலகட்டத்திற்கு பின், தற்போது நிலைமை சீராகி உள்ளது. இந்தியா, சீனா, வங்கதேசம், தாய்லாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து, 13 லட்சம் வேலையாட்களை மலேஷியாவிற்கு எடுப்பதற்கான முயற்சி நடக்கிறது.

இந்தியாவில் இருந்து மலேஷியாவிற்கு தொழிலாளர்கள் உரிய ஆவணம் இல்லாமல் வர வேண்டாம். சுற்றுலா வரச்சொல்லி பணியில் அமர்த்தப்படுவதால் துன்புறுத்தப்படுகின்றனர். தொழிலாளர்கள் சரியான ஏஜன்ட், துாதரகம் மூலம் முறையாக விசாரணை செய்து வர வேண்டும். அந்நிய தொழிலாளர் நலனுக்கு அவர்கள் தங்கும் இடவசதி, சரியான சம்பளம் வழங்குதல் ஆகியவற்றை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். மலேஷியா சிறையில் உள்ள தொழிலாளர்கள், கருணை அடிப்படையில் அவ்வப்போது சொந்த நாட்டிற்கு அனுப்பப்படுகின்றனர்.

மலேஷியாவிற்கு வரும் நபர்களை கண்காணிக்க தனியாக செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் பத்தாண்டு களில் மலேஷியா இயந்திரமயமாக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சி யில், ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி, எம்.எல்.ஏ., காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் பங்கேற்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.