குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் பற்றி விவாதிப்பதற்காகக் கடந்த ஜூன் 15-ம் தேதி டெல்லியில் மம்தா பானர்ஜி 22 எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். இதில், 16 எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி ஆகியோரின் பெயர்கள் குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வில் முன்மொழியப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் மூவருமே குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் போட்டியிட விருப்பமில்லை என்று தெரிவித்திருந்தனர்.
இவர்கள் பெயர்களை அறிவிக்கும் முன் வேட்பாளர்களுடனோ அல்லது கட்சிகள் மத்தியில் எந்த ஒரு ஆலோசனையும் நடத்தவில்லை என்பது அவர்கள் மறுப்பிற்கு பின் வெளிச்சம் ஆனது. எனினும் எதிர்க்கட்சிகளின் தரப்பில் வேட்பாளரை நிறுத்துவதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில், குடியரசுத் தலைவர் வேட்பாளரை இறுதி செய்வது தொடர்பாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில், எதிர்க்கட்சிகள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில், காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. இந்த கூட்டத்துக்குப் பின் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்த ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதன் மூலம் மம்தா, காங்கிரஸை எதிர்க்கட்சியின் இடத்திலிருந்து வெளியேற்ற முயற்சிக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். மம்தா அழைத்த தெலங்கானா ராட்டிர சமிதி, ஆம் ஆத்மி, அகாலி தளம், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் கட்சி போன்ற கட்சிகள் காங்கிரஸ் இருந்த காரணத்தினால் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதோடு கோபாலகிருஷ்ணா காந்தி, பரூக் அப்துல்லா-வை சிவசேனா விரும்பவில்லை. இந்தநிலையில்தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்மொழியப்பட்டு எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் யஷ்வந்த சின்ஹா.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, “கடந்த சில ஆண்டுகளில், சின்ஹா மிகவும் நிலையான பா.ஜ.க மற்றும் மோடிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். ரஃபேல், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவற்றில் எதிர்க்கட்சிகளின் ஒரு பகுதியாக இருந்துள்ளார். மிக முக்கியமாக, எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரிய ஒருமித்த கருத்து அவரின் பெயரில் தோன்றியது” என்கிறார்.
“சின்ஹா பா.ஜ.க-வுடன் இணைவதற்கு முன்பு, அவர் ஒரு சோசலிஸ்ட் தலைவராக இருந்தார், அவர் கர்பூரி தாக்கூருடன் நெருக்கமாக பணியாற்றியவர் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் கூடிய அரசாங்கத்தில் நிதி அமைச்சராகவும் பணியாற்றினார். அவர் மோடி அரசாங்கத்தின் ‘தொடர்ச்சியான, நிலையான மற்றும் உறுதியான’ விமர்சகர்” என தன் கருத்தைப் பகிர்ந்துள்ளார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.
பீகார் மாநிலம் பாட்னாவில் 1937-ல் பிறந்தவர் யஷ்வந்த் சின்ஹா. இவர் அரசியல் அறிவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ளார். பாட்னா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று 24 ஆண்டுக்காலம் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 1971ஆம் ஆண்டு முதல் 2 ஆண்டு காலத்திற்கு ஜெர்மனிக்கான இந்தியத் தூதரகத்தில் முதன்மைச் செயலராகப் பணியாற்றியிருக்கிறார். ஜெர்மனிக்கான இந்திய தூதரக தலைவராகவும் பணியாற்றினார்.
1984-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஜனதா கட்சியில் சேர்ந்து அரசியலில் பணியாற்றத் தொடங்கினார். 1986-ல் ஜனதா கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1988-ல் ராஜ்யசபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989-ல் ஜனதாதளம் கட்சி உருவானபோது அதன் பொதுச் செயலாளர் ஆனார். 1990-ல் இந்தியாவின் நிதியமைச்சராக சந்திரசேகர் அமைச்சரவையில் பணியாற்றினார். 1996-ல் பா.ஜ.கவில் இணைந்து தேசிய செய்தித் தொடர்பாளராகவும் யஷ்வந்த் சின்ஹா இருந்துள்ளார். யஷ்வந்த் சின்ஹா 1998, 1999 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் ஹசாரிபாக் லோக்சபா தொகுதியிலிருந்து பா.ஜ.க சார்பில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க அரசில் மார்ச் 1998-ல் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2002-ஆம் ஆண்டு வெளி விவகார அமைச்சராகவும் இருந்துள்ளார். 84 வயதான சின்ஹா, பல விஷயங்களில் மோடி அரசு மற்றும் பா.ஜ.க-வுடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கட்சியிலிருந்து ராஜினாமா செய்து, 2018-ல் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும், 2021-ல், மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸில் (டிஎம்சி) சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..