சென்னை: “குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு தொற்று பாதிப்புகள் உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், தொண்டை எரிச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது கவனமாக அனுப்ப வேண்டும். அவர்களுக்கு தொற்று பாதிப்புகள் உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், தொண்டை எரிச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட் கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து ஐஐடியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கட்டடத்தின் ஸ்திரத்தன்மை, பூச்சுத்தன்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து கொண்டுள்ளனர்.
இதுதொடர்பாக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரிடமும் கேட்டுள்ளோம். அறிக்கை இன்னும் 4,5 நாட்களில் வந்துவிடும் என்று கூறியிருக்கிறார். அறிக்கை கிடைத்தபின், தமிழக முதல்வரிடம் அறிக்கையை சமர்ப்பித்து, அதன்பிறகு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும், எந்த மாதிரியான பாதிப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது, அதற்கு எந்த வகையிலான தீர்ப்பு மேற்கொள்வது என்பது குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா தொற்றினால் பாதிக்கப்படுகிறவர்கள் ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் 92 சதவீதம் பேர் வீடுகளிலே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 8 சதவீத பேர் மட்டுமே மருத்துவமனைகளுக்கு வந்துள்ளனர். கரோனா கேர் சென்டர் என்ற வகையில் சென்னை மாநகராட்சி சார்பில், தண்டையார்பேட்டை தொற்று மருத்துவமனையில் மட்டுமே ஒரு 5 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா கேர் சென்டர் ஒரு மூன்று நான்கு இடங்களில் தயார் செய்யும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நிரந்தரப் படுக்கைகள் என்பது கரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கான படுக்கைகள் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி,ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி, கேஎம்சி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில், ஒவ்வொரு மருத்துவமனையிலும் 200 முதல் 300 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.
எனவே பெரிய அளவில் அச்சப்பட வேண்டிய கவலை இல்லை. 8 சதவீத பேர் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கின்றனர். முகக்கவசம் அணிவது அவசியம். நம் உயிரை நாம் பாதுகாத்துக் கொள்வது அவசியம். கரோனா அதிகரித்தாலும் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இல்லை. கரோனாவால் உயிரிழப்புகள் குறைவாகவே உள்ளது, எனவே மக்கள் எச்சரிக்கையாக இருந்தாலே போதும்” என்று அவர் கூறினார்.