கிண்டி கிங்ஸ் மருத்துவமனையை மீண்டும் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் கார் நிறுவன பராமரிப்பு நிலையத்தை அமைச்சர் மா.சுப்பிரணியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தினசரி 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, டெல்லி போன்ற இடங்களில் 50 சதவீதம் தொற்று அதிகரித்து வருகிறது.
ஒமிக்ரான் பொருத்தவரை பிஏ- 1 2 3 உள்ளிட்ட ஏழு வகையான தொற்று பரவி வருகிறது. தற்போது அதிகளவில் பிஏ 4, 5 வகைகளில் வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1600 நபர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக 92 சதவீத நபர்கள் வீட்டில் தனிமை படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 8 சதவீத நபர்கள் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டில் தனிமைபடுத்திக் கொள்ள வசதி இல்லாதவர்களுக்கு மருத்துவமனை மூலம் சிகிச்சை பெறுவதற்காக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி கொரோனா கேர் சென்டர் அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
சென்னை ராஜீவ் காந்தி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட அரசு மருத்துமனைகளில் கொரோனாவுக்காக தனிப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் மீண்டும் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது.
தற்போதையை சூழலில் தொற்று ஏற்படுவது அதிகரித்தாலும் உயிர் பாதிப்பு குறைவாகவே உள்ளது. அதேபோல் தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டதால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக பள்ளிக் குழந்தைகள் சிறுவர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுவது அவசியம். பள்ளிச் செல்லும் குழந்தைகளின் மீது பெற்றோர்கள் தனி கவனம் செலுத்தி கண்காணிப்பது அவசியம்.
சென்னையில் 122 இடங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் தோற்று பாதித்தவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக அந்த இடங்களில் மாநகராட்சி சார்பாக நோட்டீஸ் ஒட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தாலும் தற்போதைக்கு புதிய கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. மக்கள் எச்சரிக்கையாக இருந்தால் போதுமானது. 2016 ஆம் ஆண்டு நீட் தேர்வு இல்லாத தமிழக பாடத்திட்டத்தில் மருத்துவம் படித்த கடைசி பேட்ச் மாணவர்கள் 3 தங்க பதக்கம் பெற்றுள்ளனர், அவர்கள் இன்று முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற உள்ளதாகவும் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM