மும்பை : ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான கெளதம் அதானி இன்று தனது 60வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தனது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு சமூகப் பணிகளுக்காக 60,000 கோடி ரூபாய் நன்கொடையாக அளித்துள்ளார்.ஃபோர்ப்ஸ் ரியல் டைம் பில்லியனர்கள் பட்டியலில் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், அதானி குழுமத்தின் தலைவருமான கெளதம் அதானியின் நிகர மதிப்பு 95 பில்லியன் டாலராகும்.இந்த நிலையில் கெளதம் அதானி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘எங்கள் தந்தையின் 100வது பிறந்த நாள், எனது அதானியின் 60வது பிறந்த நாளில், அதானி குடும்பம் இந்தியா முழுவதும் சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்காக 60,000 கோடி ரூபாயினை கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,’ என பதிவிட்டுள்ளார். இது இந்திய மக்களின் வளர்ச்சிக்காக பயன்படும் என்று தெரிவித்தவாறு தான் பள்ளிக் குழந்தைகளுடன் இருக்கும் போட்டோகளையும் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.நன்கொடையாக வழங்கும் ரூ.60 ஆயிரம் கோடி, அதானியின் மொத்த சொத்து மதிப்பில் வெறும் 8 சதவீதம் ஆகும். இந்திய கார்பரேட் வரலாற்றில் வழங்கப்படும் மிகப்பெரும் நன்கொடைகளில் இதுவும் ஒன்றாகும்.