சித்திரவதைக்குத் தப்பி இலங்கையிலிருந்து பிரித்தானியா வந்த ஒருவர், ஆரம்பத்தில் தெருவோரமாக படுத்து உறங்கியிருக்கிறார்.
இன்று ஒரு சமையல் கலை நிபுணராக உயர்ந்து நிற்கும் அவரது பெயர் யோகி.
2008ஆம் ஆண்டு, குடும்பத்தைப் பிரிந்து பிரித்தானியாவுக்கு வந்து சேர்ந்த யோகிக்கு பிரித்தானியாவில் யாரையும் தெரியாது. கொஞ்ச காலம் தெருவோரம் படுத்துறங்கி, பின்னர் Freedom from Torture என்ற தொண்டு நிறுவனம் அவருக்கு ஒரு அறையை பெற்றுக்கொள்ள உதவியபோது, அந்த அறைக்கு அருகில் ஒரு கோவில் இருந்திருக்கிறது. பெரும்பாலும் அங்கு சென்றுதான் சாப்பிடுவாராம் யோகி.
ஆனால், திடீரென ஒரு நாள் இதய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது யோகிக்கு. ஏற்கனவே குடும்பத்தைப் பிரிந்து தனியாக பிரித்தானியாவில் வருத்தத்தில் இருந்த நிலையில் மன அழுத்தம் அதிகரிக்க, அதிக அளவில் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் யோகி.
ஒரு நாள் திடீரென மயங்கிச் சரிந்த யோகி கண் விழித்தபோது, மன நல மருத்துவமனை ஒன்றில் தான் அனுமதிக்கப்பட்டதை அறிந்துகொண்டிருக்கிறார்.
மீண்டும், Freedom from Torture அமைப்பு உதவிக்கு வந்திருக்கிறது. அவர்கள் யோகியை Migrateful என்ற தொண்டு நிறுவனத்திற்கு அறிமுகம் செய்ய, அதன் மூலம் சமையல் கற்றுக்கொண்டு, உணவு பாதுகாப்பு சான்றிதழ்கள் பெற்றுக்கொண்டு, பிரித்தானிய அருங்காட்சியகத்தில் வேலை கிடைக்க, அந்த வேலையை செய்துகொண்டே ஒன்லைனில் சமையல் வகுப்புகளைத் துவங்கியிருக்கிறார்.
ஆரம்பத்தில், தன் தாய் மொபைல் மூலம் தனக்குக் கற்றுக்கொடுக்க, முதன்முதலாக பருப்புக் கறி ஒன்று செய்யக் கற்றுக்கொண்டாராம். அப்படியே அம்மா உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக சமையல் கற்றுக்கொண்டு யோகி சமைக்கத் துவங்க, அவர் தங்கியிருந்த அறையின் அருகே தங்கியிருந்த ஈரானியர்கள் இருவர், யோகியின் சமையல் வாசனையால் ஈர்க்கப்பட்டு, யோகி இன்று என்ன சமைக்கிறீர்கள் என்று கேட்பார்களாம். அந்த அளவுக்கு சமையலில் தேர்ச்சி பெற்றுவிட்டார் அவர்!
இதற்கிடையில், 14 ஆண்டுகள் பிரிந்திருந்த குடும்பத்தையும் பிரித்தானியாவுக்கு வரவழைத்திருக்கிறார் யோகி. தான் இரண்டு வயது குழந்தையாக விட்டு வந்த தன் மகள், வளர்ந்து 16 வயதுப் பெண்ணாக வந்து நிற்க, தந்தையும் மகளும் சந்தித்த சந்தோஷத்தில் இருவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்துக்கொண்டு, பிரிந்தவர் சேர்ந்தால் பேசவும் தோன்றுமோ என்பதுபோல, ஆனந்தக் கண்ணீர் வடித்தபடி வெகு நேரம் பேசாமலே நின்றிருந்தோம் என அந்த நெகிழ்ச்சித் தருணத்தை நினைவுகூருகிறார் யோகி.
சித்திரவதைக்குத் தப்பி இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்தபோது, ஒரு தேநீர் கூட தயாரிக்கத் தெரியாத யோகி, இப்போது ஒரு சமையல் கலை நிபுணராக உயர்ந்து நிற்கிறார் என்பது அவருக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறதாம்.