தமிழக நிகழ்வுகள்
கோவை ஆவின் ஊழல்: 3 அலுவலர் ‛சஸ்பெண்ட்‛
கோவை-கோவை, ‘ஆவின்’ நிறுவனத்தில் நடந்த ஊழல் தொடர்பாக, அலுவலர்கள் மூவர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளனர்.கோவை, பச்சாபாளையம் ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார், மே 30ல் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். முதுநிலை தொழிலக உதவியாளர் பதவியில் இருக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் இருந்து, 8.40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த தொகை, தற்காலிக பணியாளர்களாக இருந்து பணி நிரந்தரம் செய்யப்பட்ட, 11 பேரிடம் இருந்து வசூலிக்கப்பட்ட லஞ்சப்பணம் என விசாரணையில் தெரியவந்தது.பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஊழியர்களிடம் இருந்து லஞ்சப்பணம் காசோலைகளாகவும், வங்கி கணக்கிற்கு நேரடியாகவும் பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு பதிந்தனர். அவரை சஸ்பெண்ட் செய்து, கோவை ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.மேலும், கோவை ஆவின் அலுவலகத்தில் கடந்த டிசம்பரில் ஆவின் விஜிலன்ஸ் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில், 90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இருப்பு குறைவானது கண்டுபிடிக்கப்பட்டது.உப பொருட்கள் விற்பனை அதிகாரி சுஜித் குமார், மண்டல பால் விற்பனை அதிகாரி சுப்பிரமணியம் ஆகியோர் பணம் வாங்காமல் விற்பனை செய்தது தெரிந்தது.இருவரையும் சஸ்பெண்ட் செய்து, கோவை ஆவின் நிர்வாகம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
பைக்குகள் மோதல்; 3 பேர் பலி
புதுக்கோட்டை–விராலிமலை அருகே, இரண்டு பைக்குகள் மோதியதில், மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்; மேலும் இருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே, மாதிரிப்பட்டியைச் சேர்ந்த கவுதம், 25, பிரவீன்குமார், 24, சூரியபிரகாஷ், 24, ஆகியோர், நேற்று முன்தினம் இரவு, கொடும்பாளூர் – – புதுக்கோட்டை சாலையில், ஒரே பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.கொடும்பாளூர், சவுக்கு காட்டைச் சேர்ந்த ரெங்கசாமி, 48, வடகாட்டுப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக், 25, ஆகிய இருவரும் எதிரே இன்னொரு பைக்கில் வந்துள்ளனர்.விராலிமலை அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக இரண்டு பைக்கு களும் மோதின. இதில், படுகாயமடைந்த கவுதம், ரெங்கசாமி, கார்த்திக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.பிரவீன்குமார், சூரியபிரகாஷ் ஆகியோரை, அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விராலிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
மனைவியுடன் சண்டை கணவர் கொலை
மானாமதுரை-மானாமதுரையில், குடும்பத் தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி மகன் சுரேஷ், 40. இவர், அப்பகுதியில் ‘டூ வீலர்’ பஞ்சர் பார்க்கும் கடை நடத்தினார்.இவருக்கும், மனைவி மலைச்செல்விக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. நேற்று மாலையும் பிரச்னை ஏற்பட்டது.தொடர்ந்து இரவு, 7:30 மணிக்கு கலைச்செல்வியின் உறவினர்கள் கணேசன், 30, கார்த்திக், 28, ஆகியோர் சுரேஷின் கடைக்கு வந்து அவரை கத்தியால் குத்தினர்.பலத்த காயமடைந்த சுரேஷ், மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கணேசன், கார்த்திக்கை மானாமதுரை போலீசார் தேடுகின்றனர்.
ரூ 5000 லஞ்சம் வாங்கிய எழுத்தர் கைது
திண்டிவனம்-இலவச வீட்டு மனை பட்டா ஆவணங்கள் வழங்க, விவசாயி ஒருவரிடம், 5,000 ரூபாய் லஞ்சம் பெற்ற, திண்டிவனம் தாலுகா பதிவறை எழுத்தர் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஆசூரைச் சேர்ந்தவர் கலைமணி. இவரது பெயரிலான இலவச வீட்டு மனை பட்டாவை, மகன் யுவராஜ் பெயருக்கு மாற்றம் செய்ய விண்ணப்பித்தார். திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் பதிவறை எழுத்தர் சிவஞானவேல், 48, என்பவர், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த யுவராஜ், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.சிவஞானவேலுவிடம் யுவராஜ் பணத்தை கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக கைது செய்து, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
எஸ்.ஐ., மண்டை உடைப்பு: போலீஸ்காரர் கைது
பூவந்தி–பணியில் இருந்த எஸ்.ஐ.,யை, கல்லால் அடித்து காயப்படுத்திய, போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.சிவகங்கை மாவட்டம், கீழப்பூவந்தியைச் சேர்ந்த முத்துப்பாண்டி, 32; இளையான்குடி ஸ்டேஷனில் போலீசாக பணிபுரிகிறார். பூவந்தி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., பரமசிவம், 49.நேற்று முன்தினம் இரவு, முத்துப்பாண்டி குடிபோதையில், கடைத்தெருவில் தகராறு செய்தார். அவரை எஸ்.ஐ., பரமசிவம் கண்டித்து அனுப்பினார்.ஆத்திரத்தில் இருந்த முத்துப்பாண்டி நள்ளிரவு, 12:00 மணிக்கு, செக்போஸ்ட் பணியில் இருந்த பரமசிவத்தை கல்லால் அடித்தார்.இதில், அவர் மண்டை உடைந்து, மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பூவந்தி போலீசார் முத்துப்பாண்டியை கைது செய்தனர்.இதற்கு முன், உயர் அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக முத்துப்பாண்டி ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். அதற்கு பின் பணியில் சேர்ந்தும், இளையான்குடி ஸ்டேஷனுக்கு செல்லாததால் ‘ஆப்சென்டில்’ வைத்துள்ளனர்.
மாணவி கர்ப்பம்; ஆசிரியர் கைது
தென்காசி-பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த, அரசு பள்ளி ஆசிரியர், ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 17 வயது மாணவி கர்ப்பமடைந்தார். இது குறித்து, ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர்.இதில், தென்காசி, நாகல்குளத்தைச் சேர்ந்த சங்கர், 22, பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. தொடர் விசாரணையில், இம்மாணவியை, அதே பள்ளியில் 2019ல், பத்தாம் வகுப்பு படித்த போது, அங்கு அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய இசக்கியப்பன், 54, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.நேற்று இசக்கியப்பனை ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்த போலீசார், சங்கரை தேடி வருகின்றனர்.
நாட்டு பட்டாசு தயாரிக்கும் போது பயங்கரம்; கடலுார் அருகே உடல் சிதறி மூன்று பேர் பலி
கடலுார்-கடலுார் அருகே நாட்டு பட்டாசு தயாரித்த போது, விபத்து ஏற்பட்டதில், இரு பெண்கள் உட்பட மூவர் உடல் சிதறி பலியாகினர்.
கடலுார் அடுத்த பெரியக்காரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் மோகன்ராஜ், 36. இவர், அரிசிபெரியாங்குப்பம் ஊராட்சி, எம்.புதுாரில், மாமனார் ஸ்ரீதருக்கு சொந்தமான நிலத்தில், நாட்டு பட்டாசு தயாரிக்கும் சிறிய ஆலையுடன் இணைந்த குடோன் வைத்துள்ளார்.இதற்காக, மனைவி வனிதா பெயரில் உரிமம் பெற்றிருந்தார். அந்த பட்டாசு குடோனில், நேற்று, அப்பகுதியைச் சேர்ந்த சித்ரா, 35, அம்பிகா, 50, சத்தியராஜ், 32 உட்பட பலர் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.பகல் 12:30 மணிக்கு பட்டாசு தயாரிக்கும் குடோனில் திடீரென தீப்பிடித்து, பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து கட்டடம் தரைமட்டமானது.
புகைமூட்டம் அடங்கிய பின், கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, பட்டாசு ஆலையில் வேலை செய்த சித்ரா, அம்பிகா மற்றும் சத்தியராஜ் உடல்கள் சிதறி கிடந்தன.இந்த காட்சியை கண்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், துக்க நிகழ்ச்சிக்காக பட்டாசு வாங்க வந்த, வெள்ளக்கரை சின்னதுரை மகன் வைத்திலிங்கம், 37 லேசான காயமும், அங்கு பணியாற்றிய இருவர் படுகாயமும் அடைந்தனர்.காயமடைந்தவர்கள், கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடலுார், ‘சிப்காட்’ பகுதிகளில் இருந்து மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்பு படை வீரர்கள், 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
விசாரணையில், நாட்டு பட்டாசு தயாரித்த போது, வெடி தயாரிப்பு மூலப்பொருளில் உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்து வெடித்தது தெரிய வந்துள்ளது.பட்டாசு குடோன் வெடி விபத்தில் இறந்த மூவர் உடல்களுக்கு, கடலுார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். விபத்தில் இறந்தவர்களுக்கு தலா, 3 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.பட்டாசு ஆலை உரிமையாளர் மோகன்ராஜ், 36, அவரது மனைவி வனிதா, 30, ஆகியோரை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.
தாய் உடலை வீட்டுக்குள் புதைத்துஅருகிலேயே அமர்ந்திருந்த மகன்
மயிலாடுதுறை–சீர்காழி அருகே இறந்த தாயின் உடலை, மனநலம் பாதிக்கப்பட்ட மகன் வீட்டுக்குள்ளேயே புதைத்து, அருகிலேயே அமர்ந்திருந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா, புதுப்பட்டினம் மேல தெருவைச் சேர்ந்தவர் சம்பந்தம் மனைவி இந்திராணி, 65. கணவர் இறந்த நிலையில் இந்திராணி மகன் பிரபாகரன், 35, என்பவருடன் வசித்து வந்தார்.மூன்று ஆண்டுகளுக்கு முன், பிரபாகரனுக்கு மனநலம் பாதித்தது. அவர் வெளியே செல்லாமல் இருந்துள்ளார். சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இந்திராணியை, நேற்று முன்தினம் முதல் காணவில்லை.சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது, அறையில் பள்ளம் தோண்டப்பட்டு மூடப்பட்டு இருந்தது. அதன் அருகில் பிரபாகரன் அமர்ந்திருந்தார்.
அப்பகுதி மக்கள் புதுப்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தோண்டிப் பார்த்தபோது இந்திராணி சடலம் இருந்தது.வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.போலீசார் நடத்திய விசாரணையில், இறந்த இந்திராணியின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இந்திராணி இறந்த நிலையில், பிரபாகரன் வீட்டிற்குள்ளேயே பள்ளம் தோண்டி தாயின் உடலை புதைத்து, அருகிலேயே அமர்ந்து இருந்தது தெரிந்தது.புதுப்பட்டினம் போலீசார் மர்மசாவு என வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
குறிஞ்சிப்பாடி பைனான்சியர்; புதுச்சேரியில் அடித்து கொலை
பாகூர்-புதுச்சேரி அருகே, கரும்பு தோட்டத்தில், குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த பைனான்சியர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் முருகவேல், 65. இவரது மகன் செந்தில்குமார், 39. இருவரும், வட்டிக்கு பணம் கொடுக்கும் ‘பைனான்ஸ்’ தொழில் செய்கின்றனர்.செந்தில்குமாருக்கு, ஜெயலட்சுமி என்ற மனைவி, மகள், மகன் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன், செந்தில்குமார் தன் குடும்பத்தினருடன், கடலுார், கம்பியம்பேட்டையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, வீட்டில் இருந்து வெளியே சென்ற செந்தில்குமார், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.மனைவி ஜெயலட்சுமி, அவருக்கு போன் செய்தபோது, ‘ஸ்விட்ச் ஆப்’ ஆகி இருந்தது. இதனால், ஜெயலட்சுமி தன் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். உறவினர்கள் இரவு முழுதும் சோரியாங்குப்பம் பகுதியில் தேடியும் கிடைக்கவில்லை.நேற்று காலை சாலையோரமாக இருந்த கரும்பு தோட்டத்தில் உள்ள வாய்க்காலில், தலையில் ரத்த காயங்களுடன் செந்தில்குமார் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சிஅடைந்தனர்.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில், செந்தில்குமார் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. பாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
உலக நிகழ்வுகள்
காதலியை தாக்கிய இந்திய வம்சாவளிக்கு சிறை
சிங்கப்பூர்-சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு, காதலியை அடித்து, உதைத்து, கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென் கிழக்காசிய நாடான மலேஷியாவில் வசித்து வருபவர், பார்த்திபன். இந்திய வம்சாவளியான இவருக்கு, சிங்கப்பூரில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் மூன்று ஆண்டுகளாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பார்த்திபன் சிங்கப்பூர் வந்து அந்த பெண்ணுடன் இரண்டு மாதங்கள் வசித்துள்ளார். அதற்குள் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு உள்ளதாக பார்த்திபனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குடித்து விட்டு, அந்தப் பெண்ணை பார்த்திபன் அடித்து உதைத்துள்ளார்.
கத்தியை கழுத்தில் வைத்து கொலை செய்வதாக மிரட்டியுள்ளார். அத்துடன் அந்தப் பெண்ணின் பாஸ்போர்ட்டை கிழித்துள்ளார். யாருடனும் பேசக்கூடாது என மிரட்டிய அவர், அந்த பெண்ணின் மொபைல்போனை உடைத்து, ‘சிம் கார்டை’ தின்றுள்ளார். இது தொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் படி, போலீசார் பார்த்திபனை கைது செய்தனர். வழக்கு நடத்தப்பட்டு, ஏழு மாதங்கள் மற்றும் மூன்று வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.