“ஓ.பி.எஸ் பொருளாளர் மட்டுமே… இரட்டைத் தலைமை காலாவதியாகிவிட்டது” – சி.வி.சண்முகம் அதிரடி

அ.தி.மு.க-வில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே, ஒற்றைத் தலைமை தொடர்பாக மோதல் நடந்துவருகிறது. நேற்று நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். `அ.தி.மு.க பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட அனைத்துத் தீர்மானங்களையும் நிராகரிக்கிறோம்’ என சி.வி.சண்முகம், கே.பி முனுசாமி கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் பல்வேறு உட்கட்சி பூசல் அதிமுகவில் அரங்கேறி வருகிறது.

இதையொட்டி, “அதிமுக அழிவுப்பாதையில் செல்கிறது. புதிய பொதுக்குழு தேதி செல்லாது” என வைத்திலிங்கம் ஆவேசமாக தெரிவித்திருந்தார்.

அதிமுக பொதுக்குழு

பொதுக்குழு கூட்டம் குறித்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்தின் கருத்துக்கு சி.வி.சண்முகம் விளக்கமளித்தார். அப்போது செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர், “பொதுக்குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் இருக்கிறது. ஓபிஎஸ், இபிஎஸ் கையெழுத்திட்ட அழைப்பிதழ் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டது.

பொதுக்குழுவை கூட்ட 5-ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கொடுத்தால், பொதுக்குழுவின் தனி கூட்டத்தை அவைத்தலைவர் கூட்டலாம். அறிவிப்பு கிடைத்த 30 நாள்களுக்குள் பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டியது கட்டாயம். அதிமுகவின் சட்டவிதி 19(7)ன் படி முறையாக பொதுக்குழுவை கூட்டினோம். நேற்று நடந்த பொதுக்குழுவுக்கு, ஓ.பி.எஸ் கையெழுத்தோடு அழைப்பு கொடுக்கப்பட்டது. தான் கையெழுத்தே போடவில்லை என்கிறாரா?

அதிமுக பொதுக்குழு

உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு பஞ்சாயத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை. தேர்தல் ஆணையத்திற்கு தான் உண்டு. ஜெயலலிதா இருந்தவரை அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் சட்டம். அதை ஏற்றுக்கொள்வோம்; அவர் பொறுப்புகளை அறிவித்தால், அடுத்த பொதுக்குழுவில் ஒப்புதல் பெறுவார். தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை வழிமொழிகிறேன் என பன்னீர் செல்வமே மேடையில் சொன்னாரா இல்லையா?

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான அதிகாரம் வழங்கும் சட்டத் திருத்தத்திற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாததால், அந்த பதவிகள் நேற்றோடு தானாகவே காலாவதியாகிவிட்டன. தமிழ்மகன் உசேன் அதிமுகவின் அவைத்தலைவராக முன்மொழியப்பட்டு, அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களாலும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதில் எந்தவிதமான விதி மீறலும் கிடையாது. நீதிமன்ற உத்தரவுக்கும் முரணானது கிடையாது. நாங்கள் தெளிவாக செயல்பட்டு இருக்கிறோம். வைத்திலிங்கம் உரிய அனுமதி பெறாமல் ஓபிஎஸ் காரில் வந்து பொதுக்குழுவில் பங்கேற்றார்.

2017ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வத்துக்காக அதிமுக விதியில் திருத்தம் செய்யப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தற்போது அதிமுகவின் பொருளாளர். எடப்பாடி பழனிசாமி இந்த இயக்கத்தின் தலைமை கழக செயலாளர் அவ்வளவுதான். அதிமுகவை பிளவுபடுத்தி, இரட்டை இலை சின்னத்தை முடக்கியவர் ஓ.பி.எஸ். அதிமுக சட்டவிதிகளின் மாற்றவோ திருத்தவோ பொதுக்குழுவுக்கு தான் அதிகாரம் இருக்கிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.