பிரேசிலியா: மூளை ரத்தக்கசிவு மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு பிரேசிலில் அழகிப் பட்டம் வென்றவரான கிளேய்சி கார்ரியா உயிரிழந்திருக்கிறார். அவருக்கு வயது 27.
பிரேசிலைச் சேர்ந்தவர் கிளேய்சி கார்ரியா. இவர் 2018-ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த அழகிப் போட்டியில் ‘மிஸ் பிரேசில்’ பட்டம் வென்றவர்.
கிளேய்சி கார்ரியா ஏப்ரல் மாதம் ‘டான்சில்ஸ்’ எனப்படும் தொண்டையில் வளர்ந்த சதையை அகற்றும் அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்து கொண்டிருக்கிறார். சிகிச்சைக்குப் பிறகு அவரது மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது அதன் பின் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோமா நிலைக்குச் சென்ற கார்ரியா கடந்த 2 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் கார்ரியா இரண்டு நாட்களுக்கு முன்னர் மரணம் அடைத்தார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
மரணம் குறித்து கார்ரியா குடும்பத்தினர் கூறும்போது, “அவரது இழப்பு எங்களைத் துயரில் ஆழ்ந்தியுள்ளது. அவர் மிக அற்புதமான பெண்மணி. அனைவராலும் நேசிக்கப்பட்டார். அவருடைய சிரிப்பு இல்லாமல் நாட்களை கடப்பது அவ்வளவு எளிதல்ல” என்றனர்.
கார்ரியா மரணம் பிரேசில் கலையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.