புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளரான திரவுபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் உடன் இருந்தனர். தமிழகத்தில் இருந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், அதிமுக எம்.பி. தம்பிதுரையும் உடன் இருந்தனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் முடிவதை முன்னிட்டு, ஜூலை 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் பைதபோசி கிராமத்தில் 1958-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி பிறந்தார் திரவுபதி முர்மு. சந்தால் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர் ரைராங்பூர் சட்டப்பேரவை தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக 2000 முதல் 2009 வரை பதவி வகித்தார். 2000-வது ஆண்டு மார்ச் 6 முதல் 2004 மே 16 வரை, பிஜு ஜனதா தளம்-பாஜக கூட்டணி அரசில் அமைச்சராக பதவி வகித்தார்.
பின்னர் கடந்த 2015-ம் ஆண்டு மே 18-ம் தேதி ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர் 2021-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி வரை அப்பதவியில் நீடித்தார்.
இந்தநிலையில் திரவுபதி முர்மு இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் அவருடன் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உடன் சென்றனர். தமிழகத்தில் இருந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இதில் பங்கேற்றார்.
திரவுபதி முர்முவின் வெற்றி அநேகமாக உறுதி எனக் கருதப்படுகிறது. ஏனெனில், பாஜக கூட்டணியிடம் 48% வாக்குகள் இருக்கிறது. ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளத்தின் முதல்வர் நவீன் பட்நாயக் முதல் தலைவராக தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த திரவுபதிக்கு ட்விட் செய்து ஆதரவளித்துள்ளார்.
நாட்டின் உயரிய பதவிக்கு தேர்வாக இருக்கும் திரவுபதி முர்மு, சந்தாலி எனும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால், ஜார்க்கண்டில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆளும் பழங்குடி கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். இத்தனை கட்சிகளின் ஆதரவால் திரவுபதியின் வெற்றி உறுதி எனக் கருதப்படுகிறது.