சாதி-மதம் அற்றவர்கள் என சான்றிதழ் வாங்கிய சிவகாசி தம்பதியினர்; குழந்தைகளுக்கும் கேட்டு விண்ணப்பம்!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி டி.வி.எஸ்.நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். எம்.டெக்.,எம்.பி.ஏ., பட்டதாரியான இவர் சிவகாசியில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் கம்பெனி நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஷர்மிளா எம்.காம். எம்.பில். முடித்துவிட்டு கல்லூரி ஒன்றில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், மகப்பேறுக்காக வேலையை விட்ட ஷர்மிளா, தற்போது வீட்டில் குழந்தைகளை கவனித்துக்கொண்டு டியூசன் எடுத்து வருகிறார். இந்த தம்பதியருக்கு நேசன், கரிகாலன் என இரண்டு மகன்கள்.

இதில் நேசன் யூ.கே.ஜி-யும், கரிகாலன் எல்.கே.ஜி செல்லவும் ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கார்த்திகேயனும்-ஷர்மிளாவும் தாங்கள் சாதி-மதம் அற்றவர்கள் என சான்றிதழ் வாங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றனர். இவர்களின் துணிச்சலான முடிவு குறித்து கார்த்திகேயனிடம் பேசினோம். “2019-ல் நானும், என் தம்பியும் சேர்ந்து சாதி,மதம் இல்லைன்னு சர்டிபிகேட் வாங்க முடிவு செய்தோம். ஆனால் அதை எப்படி வாங்கணுங்கிற புரொட்டோகால் தெரியல. அதனால அந்த முயற்சியை கைவிட்டுட்டேன்‌.

கார்த்திகேயன்-ஷர்மிளா

என்னோட முதல் பையன எல்.கே.ஜி சேர்க்கும்போது ஸ்கூல்ல சாதிச் சான்றிதழ் கேட்டாங்க. ஆனா, பையனுக்கு சாதிய குறிப்பிட விரும்பலனு சான்றிதழ் குடுக்க மறுத்துட்டேன். ஒரு வருஷத்துக்கு பிறகு பையன் யூ.கே.ஜி சேர்றதுக்கும் சாதிச் சான்றிதழ் கேட்டாங்க. இதுல எனக்கு சுத்தமா விருப்பமில்ல. இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரனுங்கிறதுக்காகவே ‘No Caste- No Religion’ சர்டிபிகேட் வாங்கனும்னு முடிவுசெஞ்சேன். அதுக்காக சாதி, மதம் அற்றவர்கள்னு ஏற்கெனவே சர்டிபிகேட் வாங்கினவங்களோட டீடெய்ல் எடுத்து, அவங்ககிட்ட போன்ல நேரடியா பேசி என்ன செய்யணுன்னு கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன். கூடவே, அவங்களோட சர்டிபிகேட் காப்பிய வாங்கி வச்சிக்கிட்டேன். இந்தியாவுல 9 வருஷ போராட்டத்துக்குப் பிறகு ஸ்னேகா என்ற வழக்கறிஞர்தான் முதன்முதலா சாதி, மதம் அற்றவர்னு சர்டிபிகேட் வாங்கிருக்காங்க. இதுவரைக்கும் இந்தியாவுல மொத்தம் 7பேர் இந்தமாதிரி சர்டிபிகேட் வாங்கிருக்காங்க. அதுல ஒருத்தர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர். மீதி ஆறு பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான்.

இது சம்பந்தமா என் மனைவியோட ஆலோசனை நடத்துனப்போ, அவங்களும் சாதி, மதம் அற்றவர்னு சான்றிதழ் வாங்க விருப்பம் தெரிவிச்சாங்க. அதனால கணவன்-மனைவி நாங்க ரெண்டு பேருமே எங்களோட ஒரிஜினல் சாதிச் சான்றிதழை சிவகாசி தாசில்தார் அலுவலகத்தில் திரும்ப ஒப்படைச்சிட்டு ‘சாதி இல்லைனு’ எங்களுக்கு சான்றிதழ் கொடுங்கன்னு கேட்டோம். அப்போ எங்கள ரொம்ப அதிர்ச்சியா பார்த்த அதிகாரிங்க, `இதுக்கு முன்னாடி யாராவது சாதி-மதம் அற்றவர்னு சர்டிபிகேட் வாங்கிருந்தா, அந்த நகல் குடுங்க. அதை வச்சு உங்களுக்கும் சான்றிதழ் தர்றோம்’னு சொன்னாங்க. அதனால, நான் ஏற்கெனவே வாங்கி தயாரா வெச்சிருந்த ‘No Caste- No Religion’ சர்டிபிகேட் நகலை கொடுத்தேன்

சான்றிதழ்

அத வாங்கின அதிகாரிங்க, `விருதுநகர் மாவட்டத்துல இதுவரைக்கும் யாரும் இந்தமாதிரி சர்டிபிகேட் கேட்டு விண்ணப்பிக்கல. முதன்முறையா கணவன்-மனைவி இரண்டு பேரும் சேர்ந்து சாதி-மதம் இல்லனு சர்டிபிகேட் கேட்டு விண்ணப்பிச்சிருக்கீங்க அதனால எனக்கு 2 நாள் அவகாசம் குடுங்க. நான் விசாரிச்சுட்டு உங்களுக்கு தேவையானதை செஞ்சி தர்றோம்’னு சொன்னாங்க. அவங்க சொன்ன மாதிரி ரெண்டு நாள் கழிச்சு எங்க ரெண்டு பேர்கிட்டேயும் சாதி வேண்டாம்னு எழுதிக்குடுக்குறது எவ்வளவு பெரிய சலுகைகளை இழக்கச்செய்யும், சுயவிருப்பத்தின் பேர்ல இத செய்றோமானு தீர விசாரணை நடத்தினாங்க. அதுக்குப்பிறகு வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர்னு தனித்தனியா விசாரணை நடத்தினாங்க. பிறகு, சாதி ஒதுக்கீடு எங்களுக்கு வேண்டாம். அரசு சம்பந்தப்பட்ட எந்த விவகாரத்துக்கும் சாதி ரீதியான சலுகை எங்களுக்கு வேண்டாம். எதிர்காலத்துல நானோ, எங்களோட சந்ததியினரோ மீண்டும் சாதி ஒதுக்கீடு கேட்கமாட்டோம்னு உறுதிமொழிச்சான்று எழுதிக்கொடுத்தோம். ஒருவழியா ஒரு மாதப் போராட்டத்துக்குப் பிறகு எங்க ரெண்டு பேருக்கும் சாதி, மதம் அற்றவர்கள்னு சான்றிதழ் குடுத்திருகாங்க. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

வாழ்க்கைக்கு கல்விதான் ரொம்ப அவசியமானது. அதனால சாதி வேண்டாம்னு நானும் என் மனைவியும் ரொம்ப தீர்க்கமாய் இருந்தோம். எங்க ரெண்டு பேருக்கும் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கிற ஐடியாவும் கிடையாது. எங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல கல்விய கொடுத்துட்டா சாதி அடிப்படையிலான எந்த சலுகையும் அவங்களுக்கு தேவைப்படாது. என் குழந்தைகளுக்கு நல்ல கல்விய குடுக்கமுடியுங்கிற மனதைரியம் எங்ககிட்ட இருக்கு. கல்வி, வேலை இந்த ரெண்டுலேயும் எங்களுக்கு தன்னிறைவு இருக்கு. அதனால என்னோட இடஒதுக்கீட்டை விட்டுக் கொடுக்கிறதால, அந்த வாய்ப்பு இடஒதுக்கீடு தேவைப்படுற இன்னொருத்தருக்கு பயன்படும்.

கார்த்திகேயன்

பிற்காலத்துல என் பசங்க அரசு வேலைக்கு போகணும்னு முடிவு செஞ்சாக்கூட பொதுப்பிரிவினருக்கு என்ன விதிமுறையோ அதுவே பொருந்தும். இதெல்லாம் முன்னாடியே யோசிச்சுதான் நாங்க இந்த முடிவெடுத்தோம். பசங்களுக்கு ஆரம்பத்துலேயே எந்த சலுகையும் கிடையாதுனு தெரியும்போது, ஆட்டோமேட்டிக்கா நல்லா படிச்சு அவங்க தேவைய பூர்த்திப்பண்ணிப்பாங்க. வாழ்கையில கல்வி அவங்கள வழிநடத்தும். கணவன்-மனைவி எங்க ரெண்டு பேருக்கும் சாதி மதம் அற்றவர்கள்னு சான்றிதழ் கிடைச்சிருக்கறதால, எங்கள முன்னுதாரணமா வெச்சு இப்போ எங்க பசங்களுக்கும் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிச்சிருக்கோம். அது இன்னும் ஒரு சில நாள்கள்ல கிடைச்சிரும். எங்க பசங்களுக்கும் சான்றிதழ் கிடைக்கும்பட்சத்துல தமிழ்நாட்டில் ஒரு குடும்பமாக சாதி-மதம் அற்றவர்கள்னு அடையாளப்படுத்தக்கூடிய நபர்களா நாங்க இருப்போம்” என்றார் பெருமையாக.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.