எடப்பாடி கே பழனிசாமியின் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், எஸ் பி வேலுமணி, ஆர் பி உதயகுமார், ஜெயக்குமார், தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விவகாரங்களுக்கு பதிலளித்து பேட்டியளித்தனர்.
அதன் விவரம் பிவருமாறு,
“நேற்றோடு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகி விட்டது. தற்போது, முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பொருளாளர் மட்டுமே.
அதேபோல், முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் மட்டுமே தற்போது நீடிக்கின்றனர்.
பொதுக்குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் உண்டு. ஆனால், 5ல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலே பொதுக்குழுவை கூட்டலாம்” என்று தெரிவித்தனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டால் போதும், 30 நாட்களுக்குள் அதிமுகவின் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். இதற்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களில் எந்த அனுமதியும் தேவையில்லை” என்று தெரிவித்தனர்.
மேலும், அதிமுக பொதுக்குழு கூட்டத்தை மறைமுகமாக விமர்சித்த முதல்வர் முக ஸ்டாலினுக்கு, முன்னால் அமைச்சர் சிவி சண்முகம் பதிலடி கொடுத்து பேசுகையில்,
“ரொம்ப சந்தோஷப்படாதீங்க ஸ்டாலின். உங்கள் மகன் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் சூட்டும் போதும், அவரின் மகன் இன்ப நிதிக்கு பட்டாபிஷேகம் சூட்டும் போதும், உங்கள் கட்சியில் என்ன நடக்கப்போகிறது என்பதை நாங்கள் பார்க்கத்தான் போகிறோம்” என்று சிவி சண்முகம் பதிலடி கொடுத்தார்.