விஜய் சேதுபதியின் புதிய முடிவு
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் அதிகப் படங்களில் நடித்த நடிகர் எனப் பெயரெடுத்தவர் விஜய் சேதுபதி. கடந்த 2021ம் வருடம் மட்டும் அவர் நடித்து 'மாஸ்டர், குட்டி ஸ்டோரி, லாபம், துக்ளக் தர்பார், அன்னபெல் சேதுபதி, முகிழ்' ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்த 2022ம் ஆண்டில் 'கடைசி விவசாயி, காத்துவாக்குல ரெண்டு காதல், விக்ரம், மாமனிதன்' ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன.
இதற்கடுத்து தமிழில் 'விடுதலை' படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். ஹிந்தியில் இரண்டு படம், மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதற்கடுத்து தன்னுடைய படங்கள் எவையெவை என்பது குறித்து முடிவு செய்துவிட்டாராம். ஒரு படத்தை முடித்த பிறகு மற்ற படத்தில் நடிக்கலாமா என்பது குறித்தும் யோசித்து வருகிறாராம்.
தற்போது ஐந்து படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவற்றில் வினோத் இயக்க உள்ள படம் முதலில் ஆரம்பமாகும் என்கிறார்கள். அஜித்தின் 61வது படத்தை முடித்துவிட்டு இந்தப் படத்திற்கு வினோத் வருவாராம்.
அதன் பின் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை இயக்கிய ஆறுமுககுமார் இயக்கும் படம், 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜுங்கா' படங்களை இயக்கிய கோகுல், 'கடைசி விவசாயி' படத்தை இயக்கிய மணிகண்டன் ஆகியோர் இயக்க உள்ள படங்களில் நடிக்கப் போகிறாராம் விஜய் சேதுபதி. இவர்களுடன் 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கிய நித்திலன் சொன்ன கதைக்கும் ஓகே சொல்லி இருக்கிறாராம்.