இந்திய அளவில் கல்வித்துறையில் தமிழகம் 15 ஆண்டுகள் முன்னோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
எனவே தமிழகத்துக்கு புதிய தேசிய கல்விக் கொள்கை அவசியம் இல்லை என்றும் அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு நேற்று நீதிபதிகள் முனிஷ்வர் நாத் பண்டாரி மற்றும் மாலா அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்பொது தமிழக அரசு சார்பில் முன்வகைப்பட்ட வாதங்களில், ‘தமிழ்நாடு கல்வித் தகுதியில் 15 ஆண்டுகள் முன்னோக்கி உள்ளது.2020 தேசிய கல்வி கொள்கையில் 3 வயது இருக்கும் குழந்தை பள்ளி படிப்ப தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. அப்படி 3 வயதில் பள்ளி படிப்பை தொடங்கவில்லை என்றால் பின்னர் பள்ளிப் படிப்பை படிக்க முடியாத சுழல் நிலவும் என்று குறிப்பிட்டுள்ளது. இதனால் கிராமபுற மாணவர்கள் பெரிதாக பாதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் 5 முதல் 6 வயதில்தான் குழந்தைகள் பள்ளி படிப்பை தொடங்குகிறார்கள்.
மேலும் இந்த கல்விக்கொள்கையில் 10வது வகுப்பில் மாணவர்கள் கல்வியை நிறுத்திவிட்டு. பின்னர் 11வது வகுப்பை எப்போது வேண்டுமானாலும் தொடரலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் இடைநிற்றல் சதவிகிதம் அதிகமாகும்.
தமிழக கல்வி முறையில் 14 வயது வரை மாணவர்கள் பொது தேர்வை சந்திக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் தேசிய கல்விக்கொள்கையில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பொதுதேர்வை எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் தோல்வியடையும் குழந்தைகள் கல்வியை பாதியிலேயே விட்டுவிட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் மனநல பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
“தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீடு, பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு, அரசு வேலையில் தமிழில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு என அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து சமத்துவமான கல்வி என்ற அடித்தளத்தை கொண்டுள்ள மதச்சார்பற்ற தமிழகத்தில், இரு மொழிக்கொள்கையும் தாய்மொழியில் அடிப்படைக் கல்வியும் முக்கியத்துவம் வாய்ந்தது,” என்று தமிழக அரசின் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தரமான இலவசக்கல்வி, மதிய உணவு, இலவச புத்தகம், சீருடை, மிதிவண்டி, காலணி, மடிக்கணினி, கல்வி உதவித்தொகை வழங்குவதால் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் தற்போது 51.4 % உள்ளதென தமிழ்நாடு அரசு சுட்டிக்காட்டி உள்ளது.