கட்சியில் இருந்து வெளியேறியவர்களை பற்றி தான் ஏன் வருத்தப்பட வேண்டும் என, மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்து உள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். அவருடன் சுயேச்சை எம்எல்ஏக்கள் உட்பட சுமார் 40 எம்எல்ஏக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், ஏக்நாத் ஷிண்டே எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் பட்சத்தில், மகாராஷ்டிர மாநிலத்தில், சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு கவிழும். இதை அடுத்து தனிப் பெரும் கட்சியாக உள்ள எதிரக்கட்சி பாஜக, சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன், மாநிலத்தில், ஆட்சியை அமைக்கும் வேலைகளில் ஈடுபடும்.
இதற்கிடையே, மும்பையில் உள்ள முதலமைச்சரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இருந்து, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வெளியேறினார். இதனால் அவர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா என்ற கேள்வி எழுந்தது. எனினும் அவர் ராஜினாமா செய்ய மாட்டார் என, சிவசேனா மூத்தத் தலைவர்கள் தெரிவித்தனர். இது ஒரு புறமிருக்க, சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வதற்கான வேலைகளை அக்கட்சித் தலைமை தொடங்கி உள்ளது.
இந்நிலையில் இன்று, சிவசேனா மாவட்ட செயலாளர்களுடன், அக்கட்சித் தலைவரும், முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, “அதிருப்தி எம்எல்ஏக்கள் கட்சியை இரண்டாக உடைக்கப் பார்க்கின்றனர். கட்சியை விட்டு வெளியேறியவர்களை நினைத்து நான் ஏன் கவலைப்பட வேண்டும்? சிவசேனா மற்றும் தாக்கரேவின் பெயர்களைப் பயன்படுத்தாமல், நீங்கள் (அதிருப்தி எம்எல்ஏக்கள்) எப்படி முன்னேறுவீர்கள்?” என பேசினார்.
மேலும் பேசிய உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தனது மகனை எம்.பி. ஆக்குகிறார். பிறகு அவருக்கு என் மகனுடன் என்ன பிரச்னை? நான் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிசிச்சையில் இருந்த போது, சிலர் நான் குணமடைய மாட்டேன் என்று நினைத்தார்கள். என்னால் கண்களை திறந்து கூட பார்க்க முடியவில்லை. எனினும், நான் என்னைப் பற்றி கவலைப்படவில்லை,” கூறினார்.
இதற்கிடையே, இன்று மாலை 6:30 மணிக்கு, முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை சந்திக்க உள்ளதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்து உள்ளார்.