சென்னை, பீர்க்கன்காரணை காவல் நிலையத்துக்கு வந்த பெண் ஒருவர், தன்னுடைய மகளைக் காணவில்லை என்று புகாரளித்தார். புகாரோடு காணாமல் போன இளம்பெண் எழுதிய கடிதத்தையும் காவல் நிலையத்தில் கொடுத்தார். அந்தக் கடிதத்தில், “அம்மா, அப்பா என எல்லோரும் என்னை மன்னிச்சிருங்க. நான் சந்தோஷமா இருக்க நான் அவங்ககூட போகல. தென, தென என்ன டார்ச்சர் பண்ணி போட்டோவ காட்டி மிரட்டி ரொம்பவே கொடுமைபடுத்தி நிம்மதியாவே இருக்க விடல. என்னோட போட்டோ எப்படி அவங்க செல்லுக்கு போச்சுன்னு தெரியல. அவங்க போட்டோவோட என்னுடைய போட்டோவை எடிட் பண்ணி வச்சிருக்குமா.
தயவுசெஞ்சு போட்டோவ டெலிட் பண்ணிடு எதுவும் பண்ணிறாதேன்னு கெஞ்சினோ, போட்டோவைக் காட்டி டார்ச்சர் பண்ணிட்டமா. எனக்கு நீ வேணும், வேற யாருக்கும் நீ கிடைக்க விட மாட்டேன் என்று சொல்றாங்க. என்னை விட்டுவிடு என கெஞ்சினா, நீ வரலேன்னா இந்த எடிட் பண்ணின போட்டோவை உலகெங்கும் அனுப்புவேன்னு சொல்றாங்க. அதுக்கு பேசாம நான் செத்து போயிருவேன்னு சொன்னா, நீ செத்து போனாலும் இந்த போட்டோவ அனுப்பிவிட்டு உனக்காக நானும் செத்து போயிருவேன்னு சொல்லி என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணுறாங்க.
எப்படியாவாது செல்லுல இருக்கிற போட்டோவை டெலிட் பண்ண நான் அவுங்ககூட போறேன். எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலம்மா. என்ன ரொம்ப கஷ்டபடுத்திட்டாங்க. இதுக்கு ஒரு முடிவு கட்டாம நான் வரமாட்டேன். இவனுங்கள எங்க வைக்கணுமோ அங்க வச்சாதான் சரிபட்டு வரும். எனக்கு வேற வழி தெரியல. என்னை மன்னிசிருங்கம்மா. உங்ககிட்ட சொன்னா நீங்களும் புரிஞ்சிக்க மாட்டிங்க” என்று எழுதப்பட்டிருந்தது.
இந்தக் கடிதத்தைப் படித்த போலீஸார் காணாமல் போன இளம்பெண் பாலியல் டார்ச்சர் செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியதும் அது குறித்து விசாரிக்கத் தொடங்கினர். விசாரணையில் இளம்பெண்ணுக்கு அண்ணன் உறவு முறை வரும் இளைஞர் ஒருவர்தான் இளம்பெண்ணுக்கு டார்ச்சர் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் தேடிவருகின்றனர்.