இல்லம் தேடி வருகிறது புதிய மின்னணு ரேசன் கார்டு! தமிழகஅரசு

சென்னை:  புதிய ரேசன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, மின்னணு முறையிலான ரேசன் கார்டுகள் தபால் மூலம் விண்ணப்பதாரரின் இல்லத்துக்கே அனுப்பி வைக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அஞ்சல் கட்டணத்தை பயனாளிகளிடம் வசூல் செய்து குடும்ப அட்டைதாரர்கள் முகவரிக்கு அனுப்ப அரசு அறிவுறுத்தி உள்ளது.

புதிய மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபா்களுக்கு அஞ்சல் வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகளின் இருப்பிடத்திற்கே அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப் பேரவையில் தமிழக உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி அறிவித்திருந்ததாா். இத் திட்டத்திற்கான கட்டணம் மற்றும் வழிமுறைகள் குறித்து தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பதாரா் தபால் மூலம் பெற விரும்புகிறாரா அல்லது நேரில் பெற விரும்புகிறாரா என விருப்பம் தெரிவிப்பதற்கான பொதுவிநியோகத் திட்ட இணையதளத்தில் உரிய வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களின்  விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு ஏற்பாணை வழங்கும்போது, தபாலில் பெறுவதற்கான கட்டணம் ரூ.25-ஐ இணையவழியில் செலுத்துமாறு, விண்ணப்பதாரருக்கு குறுந்தகவல் மூலமாகத் தெரிவிக்கப்படும். கட்டணம் செலுத்தப்பட்ட பிறகு ஒப்பதல் பெறப்பட்டு தபால் துறை மூலமாக விரைவு தபாலில் விண்ணப்பதாரருக்கு அனுப்பி வைக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த  ரேசன் கார்டை,  விண்ணப்பதாரா் சம்பந்தப்பட்ட முகவரியில் வசிப்பவா்தானா என்பதை சரிபாா்த்த பிறகே  அவரிடம் தபால்காரர் ஒப்படைப்பார்.  தபால் மூலமாக புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை பெற விரும்பாதவா்களுக்கு தற்போதைய நடைமுறைப்படி குடும்ப அட்டை தொடா்ந்து வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.