அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலிருக்கும் தொடக்கப்பள்ளி ஒன்றில், 18 வயதான சால்வடார் ராமோஸ் என்ற இளைஞர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதில் 19 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், ஆயுதங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருக்க கூடுதல் கட்டுப்பாடு விதிக்கும் மசோதா, செனட் சபையில் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இந்த வார இறுதியில் முழு வடிவம் பெறவிருக்கும் துப்பாக்கி கட்டுப்பாடு மசோதா இறுதிக்கட்ட வாக்கெடுப்புக்கு விடப்பட்டிருக்கிறது.
இந்த மசோதா நிறைவேறினால் 21 வயதுக்கு குறைவாக துப்பாக்கி உரிமம் வாங்குபவர்களுக்கு கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய கட்டுப்பாடுகள் மூலம் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை வெகுவாக குறைக்க முடியும் என அமெரிக்க அரசு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.