க.சண்முகவடிவேல்
திருச்சிராப்பள்ளி மாவட்டஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி பகுதியில் பெருந்திறள்( மெட்ரோ) துரித போக்குவரத்து தொடர்பான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், முதன்மை செயலாளருமான எம்.ஏ.சித்திக் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநரும், முதன்மை செயலாளருமான எம்.ஏ.சித்திக் தெரிவித்ததாவது:-
தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் துரித போக்குவரத்து சேவையை மக்களுக்கு வழங்கி வருகிறது. அதேபோல் திருச்சி மாநகராட்சியிலும், மக்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையிலும் மற்றும் விரைவாக்கும் வகையிலும் பெருந்திறள் துரித போக்குவரத்திற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. அதற்கான முதற்கட்ட ஆலோசனைதான் இது. இந்த சாத்தியக் கூறு ஆய்வின் மூலம் திருச்சி மாநகராட்சிக்கு உகந்த துரித போக்குவரத்து முறை மற்றும் பெருந்திறள் துரித போக்குவரத்திற்கு உகந்த வழித்தடங்கள் கண்டறியப்படும்.
மேலும், இதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பின் பெருந்திறள் மெட்ரோ துரித போக்குவரத்துத் திட்டத்தை நிறைவேற்ற மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
திருச்சி பெருந்திறள் துரித போக்குவரத்து திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்வதற்கு தேவையான “ஒருங்கிணைந்த நகர்வுத்திட்டம்” (Comprehensive Mobility Plan) தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்த அறிக்கை விரைவில் கிடைக்கப்பெறும். ஒருங்கிணைந்த நகர்வுத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு விரிவான சாத்தியக் கூறு அறிக்கை(Detailed Feasibility Report) தயாரிக்கப்பட்டப் பின்னரே திருச்சி மாநகரத்திற்கு உகந்த மெட்ரோ துரித போக்குவரத்து அமைப்பினை தேர்வு செய்ய முடியும். மேற்கண்டவாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், முதன்மை செயலாளருமான எம்.ஏ.சித்திக் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன முதன்மை மேலாளர்கள் ஆர்.எம்.கிருஷ்ணன், த.லிவிங்ஸ்டன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் எம்.கேசவன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர்(திட்டங்கள்) மாநகராட்சி செயற்பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் எ.முத்தையா, உதவிக் கோட்டப் பொறியாளர் ஆர்.சத்தியன், மற்றும் மத்திய அரசு சார்ந்த நிறுவனமான அர்பன் மாஸ் டிரான்சிஸ்ட் கம்பெனி முதுநிலை ஆலோசகர் ஷேசாத்திரி உதவித் துணைத்தலைவர் அழகப்பன் உள்ளிட்ட மெட்ரோ தொடர்புடைய மற்றும் மாநகராட்சி, மாவட்ட உயர் அதிகாரிகள் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil