இணைய அடிமைகளாக மாணவர்கள்; மாற்றுத் திட்டம் என்ன? திருச்சி பேராசிரியர் விளக்கம்

சர்வதேச ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சிலம்ப கோர்வை கழகம் மற்றும் உலக சிலம்ப இளையோர் சம்மேளனம் சார்பில் சிலம்ப விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச ஒலிம்பிக் தினமான ஜூன் 23 அன்று விளையாட்டு மற்றும் ஆரோக்கியத்திற்கான நாளாக கொண்டாடப்படுகிறது., இதில் விளையாட்டுடன் தொடர்புடையவர்கள் வெகுஜன விளையாட்டுகளை ஊக்குவிக்கவும் பயிற்சி செய்யவும் ஒன்று கூடுகின்றனர். மக்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த அனுமதிக்கும் பரந்த அளவிலான விளையாட்டு, கலாச்சார மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கான ஆதரவையும் இந்த நாளில் வழங்கப்படும். இந்த நாள் மக்களை ஒரு சிறந்த உலகத்திற்காக ஒன்றிணைக்கிறது.

1948 ஆம் ஆண்டில், ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோமில் நடந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 41வது அமர்வில், செக் ஐஓசி உறுப்பினரான டாக்டர் க்ரூஸ், உலக ஒலிம்பிக் தின யோசனையை பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்த நாள் ஒலிம்பிக் இயக்கத்தின் கருத்தை அடிப்படையாகக் கொண்டது. ஜூன் 23, 1894 இல் சோர்போன் பாரிஸில் ஐஓசி நிறுவப்பட்டதை முன்னிட்டு இந்நாள் கொண்டாப்படுகிறது, இதில் பியர் டி கூபெர்டின் ஒலிம்பிக் விளையாட்டுகளை புதுப்பித்தார்.

தேசிய ஒலிம்பிக் கமிட்டி (NOC) இந்த நிகழ்வை உருவாக்கியது, இது ஒலிம்பிக் இயக்கத்தின் வரலாற்றில் ஒரு சிறப்பு தருணத்தைக் குறிக்கிறது. சர்வதேச ஒலிம்பிக் தினம் 2022: விளையாட்டுகளில் பங்கேற்கவும், விளையாட்டு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை பரப்பவும் மக்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த நாள் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது.

இந்த ஆண்டு ஒலிம்பிக் தினத்தின் கருப்பொருள் ‘அமைதியான உலகத்திற்காக ஒன்றுபடுங்கள்’ என்பதாகும். அதனை முன்னிட்டு இன்று தமிழ்நாடு சிலம்ப கோர்வை கழகம் மற்றும் உலக சிலம்ப இளையோர் சம்மேளனம் சார்பில் சிலம்ப விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிலம்ப கோர்வை துணை தலைவர் வரகனேரி ரவிச்சந்திரன் மற்றும் கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியின் தமிழ்த் துறை உதவிப்பேராசிரியர் கி.சதீஷ் குமார் ஆகியோர் கலந்துக்கொண்டு பேசினர்.

இதில் பேசிய சதிஷ்குமார் கூறுகையில்,  சர்வதேச ஒலிம்பிக் தினத்தில் சிறார்கள், இளையவர்கள் உறுதியேற்க வேண்டியது என்னவென்றால் உடலினை உறுதி செய்து உடலோம்பல் முறைககளில் முன்னோடியாக திகழ்ந்த தமிழர்களின் மரபினை பாதுகாத்திட வேண்டும். உணவே மருந்து மருந்தே உணவு என்பதை உலகுக்கு சொன்னவர்கள் தமிழர்கள்.

இன்றைய நிலையில் கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பின் இணைய அடிமைகளாக, வீடியோ கேம் அடிமைகளாக மாணவர்கள் பெருகி வருகின்றனர். இணைய அடிமை நோயாளிகளாக வளரும் இந்த இளைய சமுதாயத்தை மீட்க வேண்டியது சமூகத்தின் தலையாய பொறுப்பாகும். இத்தகைய இளைய சமுதாயத்தை நமது மரபு வீர விளையாட்டுகளை கற்றுத் தருவதற்கும் கற்பதற்கும் வாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும்.

நவீன துரித அயல் உணவுகளை தவிர்த்து நமது நிலம்சார்ந்த ஊட்டச்சத்தான உணவுகளை உண்ண வேண்டும். குறிப்பாக மைதா பொருட்களில் தயாரிக்கப்படும் உணவுகளை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். நாள் தோறும் காலை மாலை தவறாது உடற்பயிற்சி செய்து உடல் நலத்தைப் பேண வேண்டும் என கூறினார்.

ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு நிகழ்வின் நிறைவாக மாணவ-மாணவியர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும் சிலம்ப மாணவி சுகித்தா கூறுகையில்; சிலம்ப விளையாட்டை தமிழக அரசு கேலோ இந்திய விளையாட்டில் சேர்த்தது போல ஒலிம்பிக்கிலும் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். இறுதியாக இந்திய சிலம்பக் கோர்வை தலைவர் இரா.மோகன் நன்றி கூறினார்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.