அமெரிக்காவில், சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் அளவை பாதிப்பு ஏற்படாத வகையிலும், அடிமையாகாத வகையிலும் குறைக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில், தற்போது உள்ள புற்றுநோய் விகிதத்தை குறைப்பதற்கான திட்டங்கள் வெளியிடப்பட்டன. இதில் சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் அளவைக் குறைப்பது ஒரு குறிக்கோளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் நிர்வாகக் குறிக்கோளாக இது கருதப்படுகிறது.
நிக்கோடின் என்பது புகையிலை பொருள்களில் உள்ள ஒரு வேதிப்பொருள். அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) அறிக்கையின்படி, புகைப்பழக்கம் என்பது அமெரிக்க மக்களின் இறப்புக்கான மிக முக்கியக் காரணமாக உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் 4,80,000 மக்கள் புகையிலைப் பொருள்களால் ஏற்படும் நோய்க்காரணிகளால் உயிரிழந்து வருகின்றனர். மேலும் 2020-ம் ஆண்டில், அமெரிக்காவில் 30.8 மில்லியன் மக்கள் சிகரெட் பயன்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வயது வந்தோரில் 87% மக்கள் 18 வயதிற்குள் புகை பிடிப்பதை தொடங்குகிறார்கள் என்று ஓர் அறிக்கை குறிப்பிடுகிறது. இது போன்ற புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே அரசு இந்த முடிவு எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து பேசிய FDA கமிஷனர் டாக்டர் ராபர்ட் எம் காலிஃப், சிகரெட் மற்றும் புகையிலையில் உள்ள நிக்கோட்டின் அளவுகளை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறும், அடிமையாகாத வகையிலும் குறைக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். சிகரெட்டில் அதிகபட்ச நிக்கோடின் அளவை குறைப்பதுடன், வேறு சில புகையிலை பொருள்களை தடை செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார். நிக்கோடின் அளவைக் குறைப்பது இளைஞர்கள் சிகரெட்டுக்கு அடிமையாகும் வாய்ப்பைக் குறைக்கலாம், மற்றும் தற்போது புகைப்பிடிப்பவர்களை இந்த பழக்கத்தில் இருந்து வெளியேற்ற உதவலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகளால் சிகரெட் தயாரிப்பாளர்கள் தாங்கள் பாதிப்படைவோம் என்றும், அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்ல உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முன்னதாக தன் தேர்தல் பிரசாரத்தின்போது, அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் இறப்பு விகிதத்தை குறைந்தது 50% குறைப்பதை இலக்கு எனக் கூறியதன் அடிப்படையில் இந்த திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.