தமிழகம் முழுவதும் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் ஜூலை 4 முதல் விண்ணப்பம் வினியோகம்!

சென்னை: தமிழகம் முழுவதும் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 4 முதல் விண்ணப்பம் வினியோகிக் கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் பயிற்சிப் பள்ளிகளில் 2022-2023ம் கல்வி ஆண்டில் மாணவ மாணவியரை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 4ம் தேதி முதல் http://scert.tnschools.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் உரிய கட்டணத்தை செலுத்தி இந்த இணைய தளத்தில் இருந்து தங்கள் விவரங்களை பதிவேற்றம் செய்யலாம். கட்டணம் செலுத்த டெபிட் கார்டு, கிரடிட் கார்டு, நெட் பேங்கிங் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி செலுத்தலாம். விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்டவகுப்பினர், ரூ. 500 செலுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகள், எஸ்சி, எஸ்டி வகுப்பினர் ரூ.250 செலுத்த வேண்டும்.

தொடக்ககல்வி பட்டயப்படிப்பு என்னும் ஆசிரியர் பயிற்சி பெற விரும்புவோர் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் குறைந்தபட்சம் 50 சதவீத  மதிப்பெண்  பெற்றிருக்க வேண்டும், பிசி, பிசி(எம்) எம்பிசி, எஸ்சி, எஸ்டி, எஸ்டி(எ)பிரிவினர் குறைந்த பட்சம் 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 30க்கு மிகாமல் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி உள்ளிட்டவர்கள் மாற்றுத் திறனாளிகள் அதிக பட்ச வயது வரம்பு 35, ஆதரவற்றோர், கணவரால் கைவிடப்பட்டோர், விதவைகளுக்கான வயது வரம்பு 40. மேற்கண்ட பயிற்சிக்கான விண்ணப்பங்கள் ஜூலை 9ம் தேதி வரை மேற்கண்ட இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். நிதியுதவி, சுயநிதி ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் சேர விரும்புவோர் அந்தந்த நிறுவனங்களின் இணைய தளத்தில் தனித் தனியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.