தரமணி திரைப்பட கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை தரமணியில் எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதனை தமிழக அரசு நடத்துகிறது. இன்று சினிமாவில் முன்னணியில் உள்ள பலர் இந்த கல்லூரியில் படித்தவர்கள் தான்.

சென்னையில் பல தனியார் திரைப்பட கல்லூரிகள் இருந்தாலும் அவற்றில் லட்சக் கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு சில ஆயிரம் கட்டணத்தில் படித்து முடிக்கலாம். தற்போது இந்த கல்லூரியில் இளங்கலை படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இளங்கலை-காட்சிக்கலை எனும் நான்கு ஆண்டு கால பட்டப்படிப்புகளை பயிற்றுவித்து வரும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் , தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில், 2022-23ம் கல்வி ஆண்டில் கீழ்க்கண்ட பிரிவுகளில் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இளங்கலை – காட்சிக்கலை (ஒளிப்பதிவு), இளங்கலை – காட்சிக்கலை (எண்மிய இடைநிலை), இளங்கலை – காட்சிக்கலை (ஒலிப்பதிவு), இளங்கலை – காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்), இளங்கலை – காட்சிக்கலை (படத்தொகுப்பு), இளங்கலை – காட்சிக்கலை (உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன்). எனவே, கலை ஆர்வம் உள்ள அனைத்து மாணவ,மாணவியரும் மேற்குறிப்பிடப்பட்ட பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயனடைலாம்.

இதற்கான விண்ணப்பங்களை 24ம் தேதி (இன்று) முதல் ஜூலை 22 வரை தபால் மூலமாக பெற்றோ அல்லது அல்லது www.tn.gov.in மற்றும் www.dipr.tn.gov.in எனும் இணையதள முகவரிகளிலிருந்து பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அனைத்து உரிய ஆவணங்களுடன் முதல்வர் (பொ), தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை – 600 113 என்ற முகவரிக்கு ஜூலை 27 அன்று மாலை 5 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

5 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மாணவர்கள் விண்ணப்பங்களை பெற நேரடியாக வர வேண்டாம் என்றும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.