அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்து முடிந்துள்ளது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மற்றபடி அதிமுகவின் இந்த பொதுக்குழு கூட்டத்தில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. மேலும் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் இடம், பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மனு ஒன்றை அளித்த மனுவை ஏற்றுக்கொண்டு, அடுத்த மாதம் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்று அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்அறிவித்தார்.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று டெல்லியில் உள்ள இந்தியத் தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
மேலும், அவரின் அந்த மனுவில் பொதுக்குழுவில் அதிமுக சட்ட விதிகளில் மாற்றம் செய்து, பொதுச் செயலாளர் பதவியை உருவாக்க தனது எதிர்ப்பினை தெரிவித்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு வருகின்ற 11ஆம் தேதி நடத்த உள்ள பொது குழுவுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று பன்னீர்செல்வம் அந்த மனுவில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதனை தொடர்ந்து, எடப்பாடி கே பழனிசாமியின் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், எஸ் பி வேலுமணி, ஆர் பி உதயகுமார், ஜெயக்குமார், தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், “நேற்றோடு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகி விட்டது. தற்போது, முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பொருளாளர் மட்டுமே. அதேபோல், முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் மட்டுமே தற்போது நீடிக்கின்றனர்.
பொதுக்குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் உண்டு. ஆனால், 5ல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலே பொதுக்குழுவை கூட்டலாம்” என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், பிரபல தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள ஓபிஎஸ் தீவிர ஆதரவாளரும் தீவிர ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்திருப்பதாவது, “ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் எந்த ஒரு மனுவும் அளிக்கப்படவில்லை. இது பொய்யான தகவல். உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாம். நாங்கள் இன்னும் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யவில்லை” என்று வைத்திலிங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இன்று காலை பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்ததாக டெல்லியிலிருந்து நம்பத்தகுந்த செய்திகள் வெளியாகின. அதனையே தமிழக செய்தி ஊடகங்கள் வெளியிட்டன. இந்நிலையில் திடீர் திருப்பமாக வைத்திலிங்கம், அப்படி ஒரு மனுவை ஓபிஎஸ் தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்தில் அளிக்கவில்லை என்று தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.