லண்டன்:இந்தியாவில், உரிய நேரத்தில் கொரோனா தடுப்பூசி வினியோகிக்கப் பட்டதால், இறக்க வாய்ப்பிருந்த, 42 லட்சத்திற்கும் அதிகமானோர் காப்பாற்றப்பட்டுள்ளதாக, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள இம்பீரியல் கல்லுாரி பேராசிரியர் ஆலிவர் வாட்சன் தலைமையிலான குழு, கொரோனா இறப்பு பற்றிய ஆய்வறிக்கையை, ‘தி லான்செட்’ மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தாவது:கொரோனா பரவலால், உலக நாடுகள் தெரிவித்ததை விட அதிகமானோர் இறந்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு, ‘தி எக்கனாமிஸ்ட்’ இதழ் ஆகியவை தெரிவித்துள்ளன.
அவற்றின் புள்ளி விபரப்படி, இந்தியாவில், 48 – 56 லட்சம் பேர் இறந்துள்ளனர். ஆனால், இதை இந்தியா மறுத்து, 5 லட்சத்து 34 பேர் இறந்ததாக தெரிவித்துள்ளது.இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் புள்ளி விபர அடிப்படையில், தடுப்பூசியால் ஏற்பட்ட பலன் குறித்து, 185 நாடுகளில், 2020, டிச., 8 – 2021 இறுதி வரை ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், மரணம் ஏற்பட வாய்ப்பிருந்த, 3.14 கோடி பேரில், தடுப்பூசியால், 1.98 கோடி பேர் காப்பாற்றப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவில், தடுப்பூசியால், 42 லட்சத்து 10 ஆயிரம் பேர் மரணத்தில் இருந்து காப்பாற்றப்பட்டு உள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement