எடப்பாடி கே பழனிசாமியின் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், எஸ் பி வேலுமணி, ஆர் பி உதயகுமார், ஜெயக்குமார், தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய சிவி சண்முகம் பேசுகையில், “நேற்றோடு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகி விட்டது. தற்போது, முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பொருளாளர் மட்டுமே. அதேபோல், முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் மட்டுமே தற்போது நீடிக்கின்றனர்.
அதிமுகவின் சட்டவிதி 19(7)ன் படி பொதுக்குழுவை கூட்ட அறிவித்தோம். ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திட்ட அழைப்பிதழ் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டது. அதிமுக பொதுக்குழு சட்டப்படியே கூட்டப்பட்டது.
23 தீர்மானங்களையும் நிறைவேற்ற வேண்டுமென நீதிமன்றம் கூறவில்லை. அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை. அவைத்தலைவரை பொதுக்குழு உறுப்பினர்களே தேர்ந்தெடுக்க வேண்டும்; அதுதான் அதிமுகவின் சட்ட விதி. அவைத்தலைவரை பொதுக்குழுவில் நேற்று அறிவித்தது தீர்மானம் கிடையாது.
பொதுக்குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் உண்டு. ஆனால், 5ல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலே பொதுக்குழுவை கூட்டலாம்” என்று சி.வி.சண்முகம் தெரிவித்தார்.