ஆப்கன் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,150 ஆக உயர்வு| Dinamalar

கயன்: ஆப்கானிஸ்தானில் கடந்த 22ல் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,150 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகளை செய்ய முடியாமல் தலிபான்கள் திணறி வருவதால், இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் கடந்த 22ல் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ள பாக்டிகா மற்றும் கோஸ்ட் மாகாணங்களில், ரிக்டர் அளவில் 6.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. பாக்டிகா மாகாணத்தில் கடும் சேதம் ஏற்பட்டு உள்ளது.

இது, மலைப்பகுதி என்பதால் அங்குள்ள வீடுகள், கட்டடங்கள் அதிக வலுவின்றி உள்ளன. இதனால், வீடுகளும், கட்டடங்களும் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,150 ஆக உயர்ந்துள்ளது; 1,600க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், ஆப்கனின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, அங்கு முகாமிட்டு இருந்த சர்வதேச உதவிக் குழுக்கள் நாட்டை விட்டு வெளியேறின. எனவே, இந்த பேரிடர் நேரத்தில் ஆப்கனுக்கு உதவ, உள்நாட்டில் எந்த அமைப்புகளும் இல்லை. உள்நாட்டைச் சேர்ந்த, ‘ரெட் கிரெசன்ட்’ உள்ளிட்ட சில மனிதாபிமான அமைப்புகள் உதவிகளில் ஈடுபட்டு வருகின்றன. இடிபாடுகளை நீக்கி, சிக்கியுள்ள உடல்களை மீட்கும் பணியிலும் தலிபான்கள் திணறி வருகின்றனர்.பல இடங்களில் பொதுமக்களே இடிபாடுகளை கைகளால் விலக்கி, உறவுகளை தேடி வரும் காட்சிகளை காண முடிகிறது.
ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, நார்வே ஆகிய நாடுகள், ஆப்கனுக்கு உதவிப் பொருட்களை அளிப்பதாக உறுதி அளித்துள்ளன. தலிபான் அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாததால், இந்த உதவிகளை ஐ.நா., வழியே செய்யப் போவதாக அறிவித்துள்ளன. பாகிஸ்தானில் இருந்து லாரிகளில் உணவுப் பொருட்கள் வந்திறங்கின. மேற்காசிய நாடுகளான கத்தார் மற்றும் ஈரானில் இருந்து, நிவாரண பொருட்கள் விமானங்களில் வந்து சேர்ந்தன.

இந்தியா உதவி

ஆப்கனுக்கு இரண்டு விமானங்கள் முழுக்க நிவாரண பொருட்களை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.இது குறித்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆப்கானிஸ்தானுக்கு தேவையான 27 ஆயிரம் கிலோ நிவாரண பொருட்கள் இரண்டு விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இவை, மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா., ஒருங்கிணைப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த நிவாரண பொருட்கள் வினியோகத்தை பார்வையிடவும், ஒருங்கிணைக்கவும் இந்திய துாதரகம் சார்பில் தொழில்நுட்ப குழுவினர் ஆப்கனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.